புற்றுநோய் வைத்தியசாலையை சீராக இயக்க அரசு நிதி வழங்க வேண்டும் – கஜேந்திரகுமார்
நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி, பொருளாதார சேவைகள் வரி, துறைமுக விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டமூலம் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஐந்து பிரேரணைகள் இங்கு விவாதிக்கப்படுகின்றது.இந்தவேளையில் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை மேம்படுத்தி நாட்டைக் கட்டியெழுபுவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசினால் இந்த வரி தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.
கோவிட் 19 வைரஸ் தொற்றானது அதிதீவிரமாக பரவும் இந்த வேளையில் அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய தேவை உள்ளமையை நாம் உணர்கின்றோம்.
கோவிட் 19 வைரஸ் பிரச்சினையின் பின்னணியுடன் பார்க்கும்போது அபிவிருத்தி என்னும் விடயத்தில் சுகாதார முற்னேற்றம் என்பது அதிகூடிய முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வகையில் சுகாதாரத்தை மேம்படுத்தலின் முக்கியத்துவம் கருதி நான் முக்கிய விடயம் ஒன்றினை பதிவு செய்ய விரும்புகின்றேன்.
கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் இலகுவாகப் பாதிக்கப்படக் கூடியவர்களாக புற்றுநோயாளர்களும் உள்ளனர். கடந்த கால யுத்தம் காரணமாக குண்டுத் தாக்குதல்களினால் ஏற்பட்ட இரசாயன தாக்கங்களினால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை வடமாகாணத்தில் மிக அதிகமாக உள்ளது.
அவ்வாறு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையமாக உள்ள தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை தொடர்பில் குறிப்பிட விரும்புகின்றேன்.
தெல்லிப்பளை வைத்தியசாலையில் புற்றுநோய் பிரிவை உருவாக்குவதற்கு எனது குடும்பத்தின் பங்களிப்பு கூடுதலாக இருந்தது. புற்றுநோய் பிரிவுக்குரிய கட்டடம் மற்றும் அதற்குரிய கோபோல்ற் (உழடியடவ ரnவை) இயந்திரத்தினையும் எமது குடும்பம் வழங்கியிருந்தது.
குறித்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு யுத்தத்தின் முன்னரும், பின்னரும் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்தில் மட்டுமல்ல அதற்கு அப்பாலுள்ள மக்களும் சிகிச்சை பெறும் நிலையமாக விளங்கியது. மகரகம போன்ற தொலை தூரங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்குச் செல்ல வசிதியற்ற பெருந்தொகையான நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் சேவையை இந்த வைத்தியசாலை வழங்கி வந்துள்ளது.
இந்த நிலையில் மாகாண சபையின் கீழ் இயங்கும் இந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு முழுமையாக இயங்குதவதற்குத் தேவையான ஆளணிவளம் (உயனசந) 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனாலும் அந்தப் பதவிகளுக்கான ஆட்கள் நியமிக்கப்படவில்லை. மாறாக மத்திய அரசின் கீழ் இயங்கும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அந்த ஆளணியை நியமித்து அவர்களை தெல்லிப்பளை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற அனுமதித்தனர். இச் செயற்பாட்டின் காரணமாக மத்திய அரசின் கீழ் கடமையாற்றும் வைத்திய அதிகாரிகள் மாகாண அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலையில் வேலை செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் குழப்ப நிலைகள் உருவாகியது. இவ்வாறான முரண்பாடுகளால் நோயாளர்கள் மோசமாகப் பாதிக்கப்படும் நிலை தொடர்கின்றது.
இது மட்டுமன்றி தெல்லிப்பளை வைத்திசாலையில் கோபோல்ற் இயந்திரம் மற்றும் லீனியர் அச்சிலறேற்ரர் இயந்திரம் ஆகியன உள்ளன. அதனால் ஏனைய மாகாணங்களிலுள்ள மாகாண புற்றுநோய் வைத்தியசாலைகளை விடவும் கூடுதலான நிதிச் செலவு ஏற்படுகின்றது. எனினும் அந்த நிதித் தேவையை மாகாண அரசினால் ஈடுசெய்ய முடியாதுள்ளது. மாகாண அரசின் கீழுள்ள இந்த வைத்தியசாலைக்குத் தேவையான செலவுகளை ஈடுசெய்வதற்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை.
ஒரு புறத்தில் மாகாண நிர்வாகத்தின் கீழுள்ள மேற்படி புற்றுநோய் சிகிச்சை பிரிவை நிர்வகிப்பதற்குத் தேவையான நிதியை வழங்காது மறுபுறத்தில் இந்த அந்தப் பிரிவை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்தால் அதனை அபிவிருத்தி செய்ய முடியும் என்று கூறி அதனை மத்தியின் கீழ் கொண்டு செல்ல அரசு முயற்சிக்கின்றது.
ஆனால் இந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்வது பொருத்தமற்றது.
குறிப்பாக புற்றுநோய் சிகிச்சைப் பிரிவையும், உளநல சிகிச்சைப் பிரிவையும் மத்தியின் கீழ் கொண்டு செல்வதற்கு அரசு முயற்சிக்கின்றது. இவ்வாறு இவை இரண்டையும் மத்தியின் கீழ கொண்டு செல்வதன் மூலம் நிர்வாக ரீதியான சிக்கல்கள் மேலும் உக்கிரமடையும். எனவே அநாவசியமான பிரச்சினைகளை உருவாக்காமல் அதுவும் கோவிட் 19 வைரஸ் நெருக்கடியுள்ள இக்கால கட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நலன்களை கருத்திற் கொண்டு குறித்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவானது தொடர்ந்தும் மாகாண நிர்வாகத்தின் கீழ் இருக்கக் கூடியதாக அதற்குத் தேவையான ஆளணி மற்றும் நிதி வசதிகளை வழங்கி அதன் சேவையை மேம்படுத்த அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.