November 22, 2024

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தனது பரம எதிரியாக பார்கும் அதிபர் நிகோலஸ் மதுரோ விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தனது பரம எதிரியாக பாவித்து வரும் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. டிரம்ப் தற்போது ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே டிரம்பும் அவரது மனைவி மெலனியாவும் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தனது பரம எதிரியாக பாவித்து வரும் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “எந்தவொரு நபரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாவதை நாங்கள் விரும்பவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெனிசுலாவின் எதிரியாக இருந்தாலும் அவருடன் நாங்கள் எங்கள் மனித ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். எனவே அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

வெனிசுலாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் அமெரிக்கா அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருவதும், இதனால் டிரம்ப் மற்றும் நிகோலஸ் மதுரோ இடையே பகைமை நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.