März 28, 2025

ஊரடங்கு:போலிகளை நம்பாதீர்கள்?

யாழ்.போதனாவைத்தியசாலையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு யுவதிகளில் ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு தொடர்பாக ஊடகங்களிற்கு தகவல் வெளியிட்ட யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே புங்குடுதீவை சேர்ந்த யுவதிகளுடன் தொடர்புபட்ட 22பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே யாழ்.குடாநாட்டில் இன்று மாலையிலிருந்து சுகாதார நடைமுறைகள், காவல்துறை மற்றும் இராணுவ உதவியுடன் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு பொதுமக்கள் அநாவசியமாக வீதிகளில் நடமாடாது பாதுகாப்பாக தங்கள் வீடுகளில் இருக்குமாறும் ஆ.கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை ஊரடங்கு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் போலி தகவல்களினால் ஏமாற்றமடைய வேண்டாம் என்று பொது மக்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாளை (06) இலங்கை முழுவதும் நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலாகும் என்று போலி தகவல் பரப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.