März 28, 2025

தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா யேர்மனி ஆன்ஸ்பேர்க்

03.10.2020 ஆன்ஸ்பேர்க் நகரில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழாவை யேர்மனியில் உள்ள வடமத்திய மாநிலங்களில்

அமைந்துள்ள தமிழாலயங்கள் இணைந்து சிறப்பாகக் கொண்டாடின. 10.30 மணியளவில் திட்டமிட்டவாறு தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா ஆரம்பமாகியது. ஆன்ஸ்பேர்க் நகரின் சுகாதார மையத்தின் ஆலோசனைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் அமைவாக தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் எல்லாவகையான பாதுகாப்புகளும் செய்யப்பட்டது.

வாகை சூடிய மாணவர்களையும் வளப்படுத்திய ஆசான்களையும் வரவேற்று மண்டபத்துக்குள் அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் விழா ஆரம்பிக்கப்பட்டது. விழாவில் வழமை போன்று தமிழ்த்திறன், கலைத்திறன், பொதுத்தேர்வு போன்ற விடயங்களில் நாடு தழுவிய மட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் மதிப்பளிக்கப்பட்டதுடன் 5,10,15 ஆண்டுகள் பணியாற்றும் ஆசான்களும் மதிப்பளிக்கப்பட்டனர். 20,25,30 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தமிழ்வாரிதி, தமிழ்மாணி ஆகிய மதிப்பளிப்புகளும் வழங்கப்பட்டன. நாடு மற்றும்; மாநிலம் தழுவிய மட்டத்தில் சிறந்த தமிழாலயங்களும் இவ்வரங்கில் தமது சிறப்பான பணிக்கான மதிப்பைப் பெற்றுக் கொண்டன.

விழாவின் நிறைவில் 12ஆம் ஆண்டுவரை தமிழாலயங்களில் கல்வி பயின்று, வெளியேறும் மாணவர்களுக்கான சிறப்பான மதிப்பளிப்பு நிகழ்வும் நடைபெற்றது. இதுவரை காலமும் அந் நிகழ்வை நெறிப்படுத்தி மதிப்பளித்து வந்த பேராசிரியர்கள் திரு.திருமதி. சண்முகதாஸ் அவர்களின் போக்குவரத்து இடையூறினால் அப்பணியை சுவீடன் நாட்டில் இருந்து வருகைதந்திருந்த பேராசிரியரும் ஆய்வாளருமான திரு விஐய் அசோகன் அவர்கள் பன்னிரொன்டாம் ஆண்டுடை நிறைவு செய்து வாகை சூடிய மாணவர்களுக்கு மதிப்பளிப்பைச் செய்து வைத்தார்.

இன்றைய சூழலில் பல்வகையான நோய்த்தொற்று ஐயங்கள் இருந்த போதிலும் விழாவோடு தொடர்புடைய அனைவரும் வருகை தந்து, தமது பங்களிப்பைச் செலுத்தியது இங்கு குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும்.