இலங்கையில் பாடசாலைகள் மூடல்:மீண்டும் கொரோனா பீதி?
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சத்தையடுத்து நாடளாவியரீதியில் நாளை (5) முதல் அனைத்து பாடசாலைகளிற்கும் இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 9ஆம் திகதி இரண்டாம் தவணை விடப்பட முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதும், தற்போது நாளை முதல் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொரொனா தொற்று அடையாளம் காணப்பட்ட கம்பஹா மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலைகள், மேலதிக வகுப்புக்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் அங்கு எந்த கற்றல் செயற்பாடும் இடம்பெறாது என கல்வியமைச்சு அறிவித்திருந்தது.
கொரோனா தொற்றுடன் பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திவுலப்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
39 வயதான அவர், கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த பெண் காய்ச்சலுடன் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் கோவிட் 19 இருப்பது கண்டறியப்பட்டது.
அதன்படி, கம்பாஹா மருத்துவமனையின் சுமார் 15 ஊழியர்களும், அந்தப் பெண் பணிபுரிந்த தனியார் நிறுவனத்தின் ஊழியர்களில் சுமார் 40 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்னும் உறவினர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். அந்த பெண்ணுக்குஎவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன.
அவருடன் நெருங்கிப் பழகியவர்களின் பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.