பச்சை நிறத்தில் மாறிய கடல்’ மீன்கள் உயிரிழக்கும் அபாயம்!
ராமேஸ்வரம் அருகே இருக்கும் மன்னார் வளைகுடா கடலின் ஒரு பகுதி பச்சை நிறத்தில் மாறியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரையில் இந்திய எல்லையில் அமைந்திருக்கிறது மன்னார் வளைகுடா. இந்த கடலில் மிகவும் அரிய வகை மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் இருக்கின்றன. ராமேஸ்வர மீனவர்கள் பெரும்பாலும் இப்பகுதியில் தான் மீன் பிடிப்பார்கள். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இக்கடலின் மண்டபம் முதல் வேதாளை வரையில் பூங்கோரைப் பாசிகள் எனப்படும் பச்சை நிறப்பாசிகள் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியிருக்கின்றன.
இதனால் பாம்பன் முதல் வேதாளை வரையில் திடீரென பச்சை நிறத்தில் கடல் நீர் மாறியதோடு, அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தஅப்பகுதி மீனவர்கள், மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், அப்பகுதியில் கடல் நீரை ஆய்வு செய்த அதிகாரிகள் இது வழக்கமானது தான் என மீனவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அதாவது, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பூங்கோரை எனப்படும் பாசி அடித்துச் செல்லப்பட்டு கரை ஒதுங்குவதால் கடல் நீர் பச்சை நிறத்தில் மாறி விடுகிறது என்றும் இந்த பாசிகள் மீன்களின் செதில்களை அடைத்து அவற்றை சுவாசிக்க முடியாமல் உயிரிழக்க செய்து விடும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு வாரங்களில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவித்த அதிகாரிகள், அந்த பாசிகளில் விஷத்தன்மை ஏதும் இல்லை என்றும் இறந்த மீன்களை மக்கள் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் வராது என்றும் தெரிவித்துள்ளனர்.