November 22, 2024

கல்வியில் புதிய மாற்றங்களை முன்மொழிந்த இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம். கல்வி ராஜாங்க அமைச்சருடன் விசேட சந்திப்பு!

நாட்டில் உள்ள கல்வி முறைமைகளில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் அதனை சீர்செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதனைக் கண்டறிந்து அதனை இப்போதுள்ள தொழிநுட்ப யுகத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மத்திய கல்வி ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் உயர்மட்டக்குழுவினர் அண்மையில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அவர்களை அமைச்சில் சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

மாறிவரும் தொழிநுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களும், ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படவேண்டும் எனவும் அதற்காக வலயம் தோறும் கணணி மூலவள நிலையங்கள் நிறுவப்பட வேண்டும் எனவும், ஒவ்வொரு ஆசிரியருக்கும் கணணி முறைமூல விசேட பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்பதோடு ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கணணிகள் பெற்றுக்கொள்ள வசதிசெய்யப்படவேண்டும் எனவும் ஒவ்வொரு பாடசாலைகளிலும் ஸ்மாட் (SMART) வகுப்பறைகள் உருவாக்கப்படவேண்டும் விசேடமாக தமிழ்மொழிமூல பாடசாலைகளுக்கு மொழிமூலமான பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். அத்தோடு ஒவ்வொரு கல்வி வலயங்களிலும் தொலைக்கல்வி நிலையங்கள் நிறுவப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

அதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் ஒவ்வொரு மாவட்டதிலும் கணணி மூலவள நிலையங்கள் சிறப்பாகச் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்று ஆசிரிய பயிற்சிகளை நிறைவுசெய்த ஆசிரியர்கள் தற்போதும் குறைந்த வேதனத்துடன் கடமையாற்றுவதனைச் சுட்டிக்காட்டிய சங்க குழுவினர் அவர்களை நிரந்தர ஆசிரிய சேவைக்குள் உள்ளீப்புச் செய்து அவர்களுக்கு அதிகரித்த சம்பளம் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

மாவட்ட நிலைகளில் திறந்த பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டு அவற்றிற்கூடாக ஆசிரியர்களின் தொழில் வாண்மைத் தரத்தை உயர்த்தவும், பாடசாலைக் கல்வியை முடித்த மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் அவை தொழிற்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கொறோனா பாதிப்புக் காரணமாக மாணவர்கள் இழந்த கல்வியை அதே ஆசிரியர்களிடம் பெற்றுக்கொள்ள வசதியாக ஆசிரியர்களின் விருப்பத்திற்கு மாறான ஆசிரிய இடமாற்றங்களையும், அதிபர் இடமாற்றங்களையும் 2021 டிசம்பர் வரை பிற்போடுமாறும், இவ்வருடம் பொதுப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் நலன் கருதி இவ்விடமாற்றங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும்  வலியுறுத்தப்பட்டது. அத்தோடு தேவை ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு மீள்நியமனம் வழங்குமாறும் கோரப்பட்டது.

மாணவர்களுக்கான சீருடைகள், பாடநூல்கள் என்பன பாடசாலை டிசம்பர் விடுமுறை  விடுகின்றபோது அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். அவ்வாறு வழங்கினாலேயே மாணவர்கள் விடுமுறைக் காலங்களில் அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ள முடியும் எனவும், ஆசிரியர்களுக்கான கையேடுகள் வருட இறுதிப்பகுதியில் வழங்கப்பட வேண்டும் எனவும், புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்போது ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே தெளிவுபடுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கபட்டது.

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், வேதன அதிகரிப்புகள் நாடு முழுவதும் உரிய காலங்களில் மேற்கொள்வதோடு, நாடு முழுவதும் ஒரே சமயத்தில் செய்யப்படவேண்டும். ஓய்வுபெறும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் இடர்ப்பாடுகள் தொடர்பாக எடுத்துக்கூறிய சங்கத்தினர் அவற்றை நிவர்த்திக்க உரிய ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படவேண்டும், ஒவ்வொரு பாடசாலைக்கும் தனித்தனியே கல்வி சாரா ஊழியர்கள் நியமிக்கப்படவேண்டும். எனவும் கேட்டுக்கொண்டனர்.

அமைச்சருடனான சந்திப்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன், சர்வதேச விவகாரங்களுக்கான சங்கத்தின் சிரேஸ்ட ஆலோசகர் த.மகாசிவம், பெண்கள் விவகார ஆலோசகர் ஈ.ஜே.மகேந்திரா, துணைத்தலைவர் பா.சரஸ்வதி, வடக்கு மாகாணச் செயலாளர் ஜெ.நிஷாகர், மத்திய மாகாணச் செயலாளர் சு.மோகன், மத்திய மாகாண பொருளாளர் அ.பாலசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.