பிரித்தானியாவில் திலீபன் நினைவேந்தல் 11 ஆம் நாள்
„மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்“ என்று முழங்கிய மாவீரன் தியாக தீபம் திலீபன் அவர்களின் 33ம் ஆண்டின் 11ம் நாள்
வணக்க நிகழ்வுகள் பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.காந்தி தேசம் என்று பெருமை பேசிய பாரத தேசத்தின் பொய்முகத்தை களைந்தெறிந்து 12 நாட்கள் பட்டினிகிடந்து தமிழீழ விடிவுக்காய் தன்னை ஈகம் செய்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்கு பிரித்தானிய மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
தற்போதைய பிரித்தானியச் சட்டத்திற்கு உட்பட்டு இணைய வழியூடாக (zoom) 15ம் திகதி முதல் 26ம் திகதி வரை 12 நாட்களும்
மாலை 7 மணி முதல் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த வணக்க நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இன்று (25.09.2020) 11ம் நாள் வணக்க நிகழ்வினை பிரித்தானிய வடமேற்கு பிராந்தியத்தினர் ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தனர்.
தாயக விடிவிற்காய் தம் இன்னுயிரைத் ஈகம் செய்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு திலீபன் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கான மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மலர்வணக்கம் சுடர் வணக்கம் இடம்பெற்றிருந்தது. திலீபன் அண்ணாவின் நினைவு சுமந்த கவிதைகள் எழுச்சி உரைகள், நடனம் என்பனவும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் சுரேஷ் அவர்கள் கருத்துரையினையும், தாயகத்திலிருந்து திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் கண்ணன் அவர்கள் நினைவுரையினையும் வழங்கியிருந்தார்கள்.
தமிழீழம் மலர்வதை வானத்திலிருந்து மற்றப் போராளிகளுடன் பார்த்து மகிழ்வேன் என்ற அவரின் இறுதிக் கனவுதனை மனங்களில் சுமந்து உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அவருக்கு வணக்கம் செலுத்தி வருகின்றனர்.