தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வந்தால் ‘எச்1பி’ விசா குறித்த இந்தியர்களின் கவலைகள் போக்கப்படும் – ஜோ பைடன்
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரின் வாக்குகளை கவருவதற்கு இருவருமே தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய வம்சாவளியினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், இந்திய வம்சாவளியினர் தங்களின் கடின உழைப்பாலும், தொழில் முயற்சிகளாலும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு அளித்துள்ளதாக ஜோ பைடன் புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்று பதவிக்கு வந்தால் ‘எச்1பி’ விசா மட்டும் சட்டபூர்வ குடியேற்றம் குறித்த இந்தியர்களின் கவலைகள் போக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்திய வம்சாவளியினரின் கலாசார, சமூக மற்றும் குடும்ப மதிப்புகள் மிகவும் பாராட்டுக்குரியவை என்று குறிப்பிட்ட அவர், அதனாலேயே இந்திய அமெரிக்க புலம்பெயர்ந்தோரை தான் மிகவும் மதிப்பதாக தெரிவித்தார்.
மேலும் உலகின் மிகவும் செல்வாக்கான பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளை இந்திய சமூகம் அலங்கரிப்பதற்காக அவர் கூறினார்.