ஆளில்லா தீவில் சிக்கிக்கொண்ட வியாட்நாமியர்கள்
ஆஸ்திரேலியாவை செல்லும் முயற்சியில், கடந்த மார்ச் மாதம் இந்தோனேசியா சென்ற 11 வியாட்நாமியர்கள், அங்கிருந்து ஆஸ்திரேலியா நோக்கிய படகிற்காக மூன்று மாத காலம் காத்துக் கிடந்துள்ளனர்.பின்னர், ஜூன் 1 அன்று ஆஸ்திரேலியா நோக்கி 11 வியாட்நாமியர்களுடன் கிளம்பிய படகு ஒரு சில நாட்களிலேயே பழுதடைய ஆளில்லா தீவான Jaco தீவில் கரை ஒதுங்கியிருக்கின்றனர். அங்கு வெட்டவெளியிலேயே இரண்டு இரவுகளை கழித்து இவர்களை, கிழக்கு திமோர் நாட்டு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று சூழலினால் தீவு நாடான கிழக்கு திமோரியிலேயே இவர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு (IOM) உதவியுடன், 8 ஆண்கள், 3 பெண்கள் உள்ளிட்ட 11 வியாட்நாமியர்களும் தனி விமானம் மூலம் தற்போது வியாட்நாமிற்கு திரும்பியிருக்கின்றனர்.
“அவசர நிலை நிலவும் இந்த சூழலுக்கு இடையிலும், தவித்து வந்த குடியேறிகளை(வியாட்நாமியர்கள்) பாதுகாக்க கிழக்கு திமோர் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது,” எனக் கூறியிருக்கிறார் கிழக்கு திமோரில் உள்ள IOM தலைமை அதிகாரி Wonesai Workington Sithole.
ஆஸ்திரேலியாவில் நல்ல வேலைக்கிடைக்கும் என்ற போர்வையில் நம்பிக்கைக் கொடுத்த முகவர்களுக்கு(ஏஜெண்டுகள்) குடியேறிகளும் அவர்களது குடும்பத்தினரும் பெரும் தொகையைக் கொடுத்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. இந்த பயண முயற்சியினால் குடியேறிகளும் அவர்களது குடும்பத்தினரும் கடன்காரர்களாகக் கூட மாறியிருக்கக்கூடும் என்ற போதும் குடியேறிகள் உயிருடன் வீடு திரும்புவது அவர்களது குடும்பத்தினருக்கு பெரும் நிம்மதியாகும்.
“எதிர்ப்பார்க்காத பயணத் தடைகள் நிலவும் இந்த காலத்தில் எங்களை பத்திரமாக வீடு திரும்ப வைத்த IOM அமைப்புக்கும் கிழக்கு திமோர் மற்றும் வியாட்நாம் அரசுகளுக்கும் எங்கள் அனைவரின்(குடியேறிகளின்) சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என குடியேறி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
“எங்களைப் போன்றவர்களின் உணர்வுகளை எப்படி கையாள்வது என்பதை முகவர்கள் நன்கு அறிந்துள்ளனர். இப்பயணம் சட்டப்பூர்வமானது எனக் கூறி எளிதாக நம்ப வைத்துவிட்டனர். அங்கு(ஆஸ்திரேலியா) சென்று விட்டால் எளிதாக வேலை செய்வதற்கான உரிமத்தை முகவர் பெற்றுக்கொடுத்து விடுவார் எனக் கூறினார்கள்,” என தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய படகுப் பயணம் குறித்து மற்றொரு வியாட்நாமியர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2013ம் முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களை ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த மாட்டோம் என எச்சரித்து வருகின்றது. கடந்த காலங்களில், இதுபோன்ற பயணங்கள் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளும் இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களும் மேற்கொண்டிருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.