திலீபன் நினைவேந்தல் கட்சி பேதமின்றி குரல் எழுப்புங்கள் – மாவை
தியாக தீபம் நினைவேந்தலுக்கு ராஜபக்ச அரசு விதித்துள்ள தடைக்கு எதிராகத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுத்துள்ள நகர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைத்துத் தரப்புக்களுக்கும் பெரும் நன்றிகளைக் கூறுகின்றோம்.
ராஜபக்ச அரசு விதித்துள்ள தடைக்கு எதிராக நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்கவேண்டும். தடை நீக்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்பவேண்டும்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நினைவேந்தலுக்கான தடைகளை நீக்கக் கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசிடம் தமிழ்க் கட்சிகள் ஓரணியில் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளை வரவேற்றுள்ள ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அஸாத் ஸாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி,
சிறிதுங்க ஜயசூரிய தலைமையிலான ஐக்கிய சோசலிசக் கட்சி, விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான நவசமசமாஜக் கட்சி உள்ளிட்ட முற்போக்கு கட்சிகள் ஆகியவற்றுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடின் நாம் முன்னெடுக்கவுள்ள சாத்வீகப் போராட்டங்களுக்கும் மேற்படி கட்சிகள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளமையையிட்டு நாம் பெருமகிழ்வு அடைகின்றோம்.
நாட்டிலுள்ள ஏனைய ஜனநாயகக் கட்சிகள், முற்போக்கு சக்திகள், புத்திஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஆதரவையும் நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.
அதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் எமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரையாற்ற வேண்டும் என்றும் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
இறந்த உறவுகளை நினைவுகூர ஒவ்வொரு இனத்துக்கும் உரிமையுண்டு. அதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது.
அரசே பொறுப்பு
தியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கான தடைகளை நீதிமன்றங்களில் ஊடாக பொலிஸாரே கோரினர். பொலிஸார் தனியார் அமைப்பினர் அல்லர்.
அவர்களும் அரசின் ஒரு முக்கிய பிரிவு. இந்தத் தடையுத்தரவுகளை பொலிஸார் ஊடாக நீதிமன்றங்களில் அரசே பெற்றுக்கொண்டது. இது அனைவரும் அறிந்த உண்மை.
நினைவேந்தல் தடையுத்தரவுகளுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளில் ஜனாதிபதி தலையிடமாட்டார் என்று சாக்குப்போக்குக் கதைகள் கூறி அரச தரப்பினர் நழுவ முடியாது.
கடந்த ஆட்சியில் பல நினைவேந்தல் நிகழ்வுகளை நாம் சுதந்திரமாக நடத்தினோம். சில இடங்களில் தடையுத்தரவுகளை நீதிமன்றங்கள் ஊடாகப் பொலிஸார் கோரியபோதும் நீதிமன்றங்கள் எமது பக்கமே நின்றன. எமது நியாயமான கோரிக்கைகளை ஏற்றன.
ஆனால், இந்த ஆட்சியில் அனைத்து நடவடிக்கைகளும் அரசின் தலையீடுகளுடன் நடக்கின்றமை வெளிப்படை.
ஏனெனில் கடந்த ஆட்சியில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்காத நீதிமன்றங்கள் இந்த ஆட்சியில் ஏன் தடை விதிக்கின்றன என்ற கேள்விகள் எம்மிடம் எழுந்துள்ளன.
எனவே, நீதி அமைச்சர் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட அதிகாரம் இருக்கின்றது. அதற்கு மேல் மனிதாபிமான ரீதியில் ஜனாதிபதி நினைத்தாலும் நினைவேந்தல் தடையுத்தரவுகளை நீக்க முடியும் என்றார்.