November 22, 2024

திலீபனிற்காக நீதிமன்ற படியில் காத்திருப்பு?

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற கட்டளை வரும் 24ம் திகதி வழங்கப்படும் என நீதிவான் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

எதிர்மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சரியான ஆவணங்களை சமர்ப்பித்து பொலிஸாரின் வாதத்துக்கு எதிரான சட்ட ஏற்பாடுகளை முன்வைக்காத நிலையில் பொலிஸாரின் கடும் ஆட்சேபனை விண்ணப்பம் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் இன்றைய தினம் முன்னிலையாகாத எதிர் மனுதாரர்கள் தரப்பு நாளை நகர்த்தல் பத்திரத்தை அணைத்து வழக்கை மீள அழைத்து பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றவியல் சட்டப்படி சட்டக்கோவைக்கு எதிராக தமது கடும் ஆட்சேபனையை முன்வைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நடத்த தடை கோரிய மனுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திகுமார், கஜேந்திரன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், மாநகர சபை உறுப்பினர் வரதராசா பார்த்திபன், முன்னாள் மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க. சுகாஷ், அரசியல் செயற்பாட்டாளர் க.விஸ்னுகாந்த் உள்ளிட்ட 20 பேரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டன.

இதன்படி கடந்த 14ம் திகதி நினைவேந்தல் நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியிருந்ததுடன். மறுநாள் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட போது தடை உத்தரவு உறு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் பிரதிவாதிகள் 20 பேரையும் இன்று (21) மன்றில் முன்னிலையாக அழைப்புக் கட்டளை சேர்ப்பிக்க உத்தரவிட்ட மன்று வழக்கை ஒத்திவைத்து.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட் சார்பில் சட்டத்தரணி கணதீபன் முன்னிலையாகினார். யாழ்ப்பாணம் மாநகர சபை சார்பில் வழக்கின் சான்றுப்படுத்தப்பட்ட ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன. அவை கிடைக்காத நிலையில் மறு தவணை ஒன்றை வரும் 25ம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு கோரினார்.

அத்துடன், மூத்த சட்டத்தரணிகள் என்.சிறிகாந்தா, வி.திருக்குமரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் ஆகியோர் இலங்கை குற்றவியல் நடைபடி சட்டக்கோவையின் 106 பிரிவின் 4ஆம் உப பிரிவின் கீழ் இந்த வழக்கை பொலிஸார் தாக்கல் செய்தமை தவறு என்று சட்ட ஏற்பாடுகள், முற்தீர்ப்புகளை வைத்து நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

தியாக தீபம் திலீபன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் என நிரூபிக்க அவரது வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமர்ப்பணம் செய்தார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களை ஆராய்ந்த மன்று யாழ்ப்பாணம் மாநகர் முதல்வர் உள்ளிட்ட இருவரது சமர்ப்பணங்களை முன்வைக்கும் வாய்ப்பை தக்கவைக்கப்பட்டுள்ளதுடன், கட்டளை வரும் வியாழக்கிழமை வழங்கப்படும் என்று அறிவித்தது.