November 22, 2024

மீண்டும் சிறீதர் தியேட்டரில் கல்வி தந்தை?

மீண்டும் படிப்படியாக டக்ளஸ் தனது அரசியல் கைகளை தனது அல்லக்கைகள் சகிதம் வடமாகாண கல்வித்துறையில் கை வைக்க தொடங்கியுள்ளார். வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கான காரணங்களை ஆய்வு செய்தால் கல்விப்புலத்தில் நிலவும் முறையற்ற அரசியல் தலையீடுகள் முதன்மையான காரணியாக இடம் பெற்று இருக்கும் என பதிவர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

வடக்கு மாகாண பாடசாலைகளை பொறுத்தவரை அதிபர்கள், ஆசிரியர்கள் வினைத்திறனாகவும் சுதந்திரமாகவும் செயல்பட வட மாகாணத்தில் நிலவும் அரசியல் சூழல்கள் நீண்டகாலமாக அனுமதிக்க வில்லை. குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக டக்ளஸ் தேவானந்தா போன்ற பலர் கல்விப்புலத்தில் அவசியமற்ற தலையீடுகளை செய்து வருகின்றனர் இதுமட்டுமில்லாது கல்வி புலத்தில் தவறு செய்யும் தனிநபர்கள் அடைக்கலம் பெறும் இடமாக சிறீதர் திரையரங்கு போன்ற பல இடங்கள் இயங்கி வருகின்றன .

பதவியுர்வுகள் , அதிபர் ஆசிரியர் இடமாற்றங்கள் , ஒதுக்கீடுகள் , புதிய நியமனங்கள் , விசாரணைகள் ,தீர்ப்புகள் என கல்வி நிர்வாகம் சார்ந்த சகல விடயங்களிலும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் முறையற்ற விதத்தில் தலையீடு செய்கின்றனர். குறிப்பாக சட்ட விதிகளுக்கு முரணான விசாரணைகள், பழிவாங்கல்கள், அதிகார துஸ்பிரயோகங்கள், சேவைப் பிரமாணக் குறிப்புக்கு முரணான நியமனங்கள் என பல அநீதிகளுக்கு பின்னால் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் இருக்கிறார்கள் .

அதே போல கல்வி புலத்தை சேர்ந்த பலரும் தங்களுடைய தனிப்பட்ட தேவைகளை முறையற்ற விதத்தில் பூர்த்தி செய்ய டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் எந்த கல்வி பின்னணியும் இல்லாத டக்ளஸ் தேவானந்தாவின் அடியாட்கள் பலர் தொண்டராசிரியர் நியமனத்தில் ஆசிரியர்களாக உள்வாங்கப்படுமளவிற்கு அரசியல் தலையீடுகள் வடக்கில் இருந்தது. இதுமட்டுமில்லாது பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிபர்கள் , ஆசிரியர்கள் பலர் அரசியல் பின்னணியுடன் முறையற்ற விதங்களில் இடம்மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அரசியல் தலையீடுகள் காரணமாக நியாயமான பதவி உயர்வுகள்இ இடமாற்றங்கள் தடை செய்யப்பட்டு இருக்கின்றன. இன்றும் முறையான மலசல வசதிகள் , நீர் வசதிகள் இல்லாமல் இயங்கும் பாடசாலைகள் மத்தியில் வசதியான நகர பாடசாலைகளுக்கு அரசியல் பின்னணியுடன் வள ஒதிக்கீடுகள், நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருகின்றன . இதனால் மாகாணத்திற்கு பௌதீக நிதி இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன

கல்வி அலுவலகம் அல்லது பாடசாலை நடாத்துகின்ற விழாக்களுக்கு தங்களை அழைக்கவில்லை என்பதற்காக பிரஸ்தாப பாடசாலை அதிபரை பழிவாங்குவது அல்லது இடமாற்றுவது அல்லது அங்குள்ள ஆசிரியர்களை இடமாற்றுவது என்பதெல்லாம் வடக்கு கல்வி மாகாணத்தில் சர்வசாதாரணமாக இடம்பெறும் விடயங்களாக இருக்கின்றன . பெற்றோர் , பழைய மாணவர்கள் என பல்வேறு பெயர்களுடன் பாடசாலைகளுக்குள் நுழையும் அரசியல் முகவர்கள் அதிபர் ஆசிரியர்களை தாக்கி காயப்படுத்தும் சம்பவங்கள் கூட பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன

இந்த அபாயகரமான சூழலுக்கு வெறுமனே டக்ளஸ் தேவவனந்தா போன்றவர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. மாறாக இவ்வாறான ஆயுததாரிகளுக்கு சொந்த இலாபத்திற்க்காக துணை போகும் பலர் எங்கள் சமூகத்தில் இருக்கிறார்கள்

கல்வி புலத்தில் ஏற்படும் சர்ச்சைகள்,பிணக்குகளுக்கு தீர்வு சொல்லும் இடமாக சிறீதர்; திரையரங்கு இருக்க முடியாது. பாடசாலைகள் தங்களுடைய தேவைகள், வள ஒதுக்கீடு குறித்து நிர்வாக மட்டத்தில் சரியான நடைமுறைகள் ஊடக பூர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும் . குறிப்பாக பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் என பல்வேறு பெயர்களில் ஆயுததாரிகள் பாடசாலை கல்வி முறையை சீர்குலைக்கும் வேளைகளில் ஈடுபடுவதை பாடசாலை நிருவாகங்கள் ஒருபோதும் அனுமதிக்க கூடாது

கல்விப்புல நெருக்கடிகள் மற்றும் குறைபாடுகள் குறித்து கல்வித்துறை சார்ந்தவர்கள் உரிய அதிகாரிகளுக்கு மேன்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் . அதன் பின் உரிய நிர்வாக நடைமுறைகளை பின்பற்றி தங்களுக்குரிய பரிகாரத்தை பெற்று கொள்ள வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் . நிருவாக மட்டத்தில் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் மனிதஉரிமை மீறல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிருவாக மட்டத்தில் உதவ வேண்டும் .இவ்வாறு அரசியல் தலையீடு இல்லாத தேவைகளை பூர்த்தி செய்கின்ற பிணக்குகளை தீர்வு தேடுகின்ற ஒரு பொறிமுறையை ஏற்படுத்த கல்வி அதிகாரிகள் முன்வர வேண்டும்.

இதன் மூலம் மட்டுமே அரசியல் தலையீடுகளை தவிர்க்க முடியும் . வடக்கு மாகாணத்தின் கல்வி பற்றி சிந்திக்கும் போது இது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.