பிழை செய்தீர்களா? சி.வி
கேள்வி: நடைபெற்று முடிந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் நடந்துகொண்ட விதம் உங்களுக்குத்
திருப்தி அளித்ததா? அத்துடன் இந்த வழக்கு பற்றி உங்கள் கருத்தென்ன? நீங்கள் பிழை செய்தீர்களா?
பதில்: நான் மாகாண சபையில் எடுத்த நடவடிக்கையானது எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் பால் எடுக்கப்பட்ட நடவடிக்கையன்று. அமைச்சரவையின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்த அமைச்சர்கள் பதவி விலகி தம்மீதான விசாரணையை எதிர் கொண்டு அதனூடாகத் தம்மை நிரபராதிகள் என்று நிரூபிப்பதன் மூலமாக மாகாண சபை நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவே விரும்பியிருந்தேன். அதில் டெனீஸ்வரன் அவர்கள் தாம் குற்றமற்றவர் என்ற வகையில் தான் பதவி விலக முடியாது என்று மறுத்தார். ஆனால் அவர் குற்றமுடையவர் என்ற கணிப்பில் நான் அவரை விலகச் சொல்லவில்லை. அவர் மீது குற்றம் சாட்டிய ஒருவர் புதிய அமைச்சர் அவையில் இருந்த காரணத்தினால் குற்றஞ் சாட்டியவரும் குற்றம் சாட்டப்பட்டவரும் ஒருமித்து அமைச்சர் அவையில் இடம் பெறுவது உசிதமில்லை என்று நினைத்தே அவரைப் பதவி துறக்கச் சொன்னேன். குற்றம் சாட்டியவர் விசாரணைத் தினத்தில் ஜெனிவா செல்ல வேண்டியிருந்ததால் அவரால் சாட்சியம் அளிக்க முடியவில்லை. கால நீடிப்பு வழங்க ஆணைக்குழு உறுப்பினர்கள் சம்மதிக்கவில்லை. ஆகவே இரு அமைச்சர்கள் மீதான விசாரணை நடைபெறவில்லை. திரு.டெனீஸ்வரன் தவிர்ந்த. மற்றைய அமைச்சர்கள் எனது கோரிக்கைக்கு உடன்பட்டு தமது பதவிகளைத் துறந்தார்கள். மேற்கண்ட காரணங்கள் நிமித்தம் எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற கடப்பாட்டில் நான் அவரைப் பதவி விலக்கியிருந்தேன். அவர் அதற்கு எதிராக நீதி மன்றை நாடியிருந்தார். டெனீஸ்வரனைப் பொறுத்தவரையில் இது அவருக்கு ஒரு மானப்பிரச்சினையாக இருந்தது என்பதைப் புரிந்துகொள்கின்றேன்.
ஆனால், இந்த விவகாரத்தை வேறு சிலர் எனக்கு எதிரான பொறியாகப் பாவிப்பதற்கு திரைமறைவில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். உதாரணத்திற்கு ஒரு கட்சிக்காரர் எந்தக் காலத்திலும் மன்றுக்கு வராது இருக்க அவரின் சட்டத்தரணி மட்டும் முழு மூச்சில் நடவடிக்கைகளில் பங்கு பற்றினார். தோகை விரித்தாடும் மயில் போல் அங்கும் இங்கும் திரிந்து தமது முக்கியத்துவத்தை வெளிக்காட்டினார். கட்சிக்காரருக்கு மன்றில் என்ன நடந்ததென்று தெரிந்திருந்ததோ எனக்குத் தெரியாது. எனக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து நடத்துமாறு சிலர் டெனீஸ்வரனுக்கு அழுத்தங்களை பிரயோகித்திருந்திருக்கலாம் என்று உணர்கின்றேன். ஆனால், எத்தகைய அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் இறுதி நிமிடத்தில் திரு.டெனீஸ்வரன் அவர்கள் சுதாகரித்து நல்லதொரு முடிவை எடுத்திருக்கின்றார். இன உணர்வு சார்ந்த அவரின் இந்த செயலை நான் பாராட்டுகின்றேன். அவரின் செயல் சுயநல சிந்தனையுடனும் மற்றும் இன ரீதியாகச் சிந்தித்த சிலரினதும் வாயில் மண் அள்ளிப் போடச் செய்துள்ளது.
இந்த வழக்கு Much ado about nothing என்ற வில்லியம் ஷேக்ஸ்பியரின் நாடகத்தை நினைவூட்டுகின்றது. அதாவது சிறு விடயத்திற்கு ஊரைக் கூட்டுவதாக இந்த வழக்கு அமைந்திருந்தது. திரு.டெனீஸ்வரன் அவர்களைப் பதவி நீக்கம் செய்த விடயத்தை வர்த்தமானியில் ஆளுநரோ அவரின் செயலாளரோ பிரசுரிக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வழக்கே பதிந்திருக்க முடியாது. திரு.டெனீஸ்வரன் அவர்களின் வெற்றிடத்திற்குப் பதில்-அமைச்சர்களை நியமித்து வர்த்தமானியில் பிரசுரித்த ஆளுநர் திரு.டெனீஸ்வரனின் பதவி நீக்கத்தை வர்த்தமானியில் பிரசுரிக்காது இருந்தமை வியப்பை ஊட்டுகின்றது. ஆளுநருக்கு இருந்த அவரது அதிகாரத்தை நான் ஏற்றே உத்தியோகபூர்வ அறிவித்தல் திரு.டெனீஸ்வரனுக்கு விரைவில் கிடைக்கும் என்று திரு.டெனீஸ்வரனுக்கு அறிவித்தல் செய்திருந்தேன்.
உத்தியோகபூர்வ அறிவித்தல் என்பது வர்த்தமானிப் பிரசுரிப்பையே. ஏன் அவ்வாறு பிரசுரிக்கவில்லை என்று ஆளுநரிடம் கேட்கப்பட்டிருந்தால் அல்லது பிரசுரிக்குமாறு கேட்கப்பட்டிருந்தால் இவ்வளவு அமர்க்களங்கள் ஏற்பட்டிருக்காது. நான் ஏற்கனவே (வ12ல்) ஆளுநரின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டிருந்தேன். அதனால்த்தான் உத்தியோகபூர்வ அறிவித்தல் வரும் என்று குறிப்பிட்டிருந்தேன். அப்படியிருந்தும் ஆளுநரிடம் எதுவும் கேட்கப்ப்படவில்லை. அவரும் நீதிமன்றம் வந்ததில்லை.
அதனால்த் தான் இதனை ஒரு துன்பியல் நிகழ்வென்றேன். நான் எந்தப் பிழையும் செய்யவில்லை. ஆளுநரின் பிழை என்னை அவதிக்குள்ளாக்கி விட்டது.