தியாகி திலீபன் நினைவு பேரணியை நடத்த தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு பொலிஸ் அனுமதி மறுப்பு..!
வவுனியாவில் நாளை 16 ஆம் திகதி இடம்பெறவிருந்த தியாகி திலீபனின் நினைவு தினத்திற்கு எவ்விதத்திலும் அனுமதி வழங்க முடியாது என வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததாக வவுனியா நகரசபை உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினரும் வவுனியா மாவட்ட தியாகி திலீபனின் நினைவு தின ஏற்பாட்டாளருமான பிரபாகரன் ஜானுஜன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தியாகி திலீபனின் நினைவு தினத்தினை அனுஸ்டிப்பதற்கும் வவுனியாவில் இருந்து பேரணியாக நல்லூர் நோக்கி செல்லவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும் அதற்கு வவுனியா பொலிஸார் ஏற்கனவே அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையில் நாம் குறித்த நிகழ்வை நடத்த மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோது இன்று தனது அலுவலகத்திற்கு அழைத்திருந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறித்த நிகழ்வுக்கு அனுமதி வழங்கமுடியாது எனவும் யாழ் மாவட்டத்தில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தடையுத்தரவினையும் எமக்கு உதாரணப்படுத்தி சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் பொலிஸார் அனுமதி மறுத்ததன் காரணத்தினால் நாம் குறித்த நிகழ்வை நடத்தமுடியாதுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.