கொலையாளிகள் நாடாளுமன்றில்:அரசியல் கைதிகள்?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே மக்களால் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .தற்போது கொலைக் குற்றம் சாட்டப்பட்டோர் மக்கள் பிரதிநிதிகளாக பகிரங்கமாக நாடாளுமன்றம் செல்ல முடியும் எனும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச்சந்தர்ப்பத்தில் சந்தேகத்தின் பெயரில் உள்ள தழிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படாமல் உள்ளனர். தொடர்ந்து இவர்கள் துரிதகதியில் விடுவிக்கப்படுவதற்கான பொருத்தமான விசேட சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு.
அமைப்பின் இணைப்பாளரும் முன்னாள் அரசியல் கைதியுமான கோமகன் கருத்து வெளியிடுகையில் இந்த முயற்சியில் தமிழ் தலைமைகளின் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை அல்லது இவற்றைக் கிடப்பில் போட்டு விட்டனர் எனவும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இலங்கையில் ‚தமிழர்‘ என்ற ஒரே காரணத்திற்காக தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள், நெருக்கடிகள் மற்றும் அடையாளச்சிக்கல்கள், இனஅழிப்புக்கள் இங்கு வரலாறாக உள்ளது. இதன் தாக்கம், வலிகள், இழப்புக்கள் இன்றைய தலைமுறையையும் அடுத்த தலைமுறையையும் இன்னும் பாதித்துக் கொண்டுதான் உள்ளது.
குறிப்பாக இதுவரையான ‚போரும் வாழ்வும்‘ ஏற்படுத்திய தாக்கம், அழிவுகள் யாவற்றிற்கும் இன்னும் நியாயமானதீர்வு, சமூகப்பாதுகாப்பு, சமூகசமத்துவம், உறுதிப்படவில்லை. தமிழ் மக்களினது வாழ்வியல் தெரிவிற்கான கூட்டுரிமைக்கான சமூகஜனநாயகம், சமூகநீதி, சமூகசமத்துவம் கிடைப்பதற்கான அதனை உறுதிப்படுத்துவதற்கான ‚அரசியல் பண்பாடு‘ இன்னும் உருவாக்கம்பெறவில்லை.
இந்நிலையில்; போர்க்காலத்தின் பொழுது கைது செய்யப்பட்டு 15 முதல் 25 வருடங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தொடர்பில் உடனடியாக அக்கறைப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கைதிகள் விடுதலை குறி;த்து இந்தத் தருணத்தில் மீண்டும் மீண்டும் பேசுபொருளாக்க வேண்டிய அவசியப்பாடு உருவாகியுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட கொலைக் குற்றவாளி பிறேமலால் ஜெயசேகரவுக்கு மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்து அரசியலமைப்புக்கு அப்பால் சென்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று கொலைக்குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் இருந்து வரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் நாடாளுமன்றம் சென்று வர அனுமதி பெற்றுள்ளார.;
இந்த இருவரும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. தற்போது கொலைக் குற்றம் சாட்டப்பட்டோர் மக்கள் பிரதிநிதிகளாக பகிரங்கமாக நாடாளுமன்றம் செல்ல முடியும் எனும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச்சந்தர்ப்பத்தில் சந்தேகத்தின் பெயரில் உள்ள தழிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படாமல் உள்ளனர் என்பதையும் கோமகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் தொடர்ந்து இவர்கள் துரிதகதியில் விடுவிக்கப்படுவதற்கான பொருத்தமான விசேட சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். இந்த முயற்சியில் தமிழ் தலைமைகளின் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை அல்லது இவற்றைக் கிடப்பில் போட்டு விட்டனர் போல்தான் தெரிகிறது.
அதே நேரம் தேர்தல் சட்டவிதிக்கமைய சிறையில் உள்ள கைதிகள் வாக்களிக்க முடியாது. ஆனால் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட முடியும். இவர்கள் வெற்றி பெற்றால் பாராளுமன்றம் செல்லவும் முடியும் என்பதனை சமகாலம் நிரூபித்துள்ளது.
தற்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 90 அரசியல் கைதிகளுள் வயோதிபர்கள், இளைஞர்கள், குடும்பஸ்தர்கள், மாற்றுத் திறனாளிகள் எனப்பல வகையினரும் அடங்குகின்றனர். மேலும் 15 முதல் 25 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் அனேகமானவர்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்;கையின் சிறைக் கட்டிடத்தொகுதியில் பன்னியிரண்டாயிரம் கைதிகளை மாத்திரமே தடுத்து வைத்திருக்கக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. ஆனால் இங்கு தற்போது இருபத்தொன்பதாயிரத்து ஐந்னூறு கைதிகளை அடைத்து வைத்துக் கொண்டு சமூக இடைவெளி பற்றிப் பேசப்படுகின்றது.
நீதிமன்ற விளக்கத் தவணைகளுக்கு அழைக்கப்படும் வழக்குகள் விசாரணைகள் எதுவுமின்றி, மூன்று முதல் ஆறு மாத காலம் என மிக நீண்ட தவணை திகதியிடப்பட்டு வருகிறது. இதனால் கைதிகள் மனச்சஞ்சலத்திற்கும் பல வித நெருக்கடிகளுக்கும் உள்ளாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலைக்கு தீடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ‚தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு ஆணைக்குழு ஒன்றை அமைத்;து மூன்று மாதங்களுக்குள் உகந்த தீர்வினை எட்டுவதாகத் தெரிவித்தார்‘ ஆனால் இது தொடர்பில் எந்த உருப்படியான நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
அதேபோன்று தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடம் கேட்ட போது ‚பன்னிரண்டாயிரம் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்த எமக்கு மிகச்சொற்ப அளவிலான அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் என்ன பிரச்சினை இருக்கப் போகிறது….?‘ என பதில் வினா தொடுத்துள்ளார். இங்கு பிரச்சினை ஜனாதிபதிக்கு அல்ல. கைதிகளாக சிறைகளில் வாழ்க்கையைத் தொலைத்து வாழும் கைதிகளுக்குத்தான் இது ஒரு பிரச்சனை. இவர்கள் சார்ந்த குடும்பத்தினர்க்கும் இது ஒரு பிரச்சினை.
குற்றச்சாட்டுக்களுக்கான தண்டணைக்கும் மேலதிகமான காலத்தை விளக்கமறியலில் கழித்து விட்ட அரசியல் கைதிகளின் விடயத்தில் இனிமேலும் ‚விசேட நீதிமன்றம்‘ அமைத்து விசாரணையை துரிதப்படுத்துகிறோம் என்று காலம் தாழ்த்தாது விசேட அரசியல்தீர்மான மொன்றை எடுத்து மனிதாபிமான ரீதியில் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். ;
தமிழ்த் தலைமைகள் அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் குறித்து இன்னும் உருப்படியாக நடைமுறைச்சாத்தியமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உந்துதலும், சிந்தனையும், திட்டமிடலும் இல்லாதவர்களாக உள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் உயிர் வாழ்க்கைச் சுதந்திரம், பாதுகாப்புரிமை உண்டு. ஆனால் அரசியல் சிறைக் கைதியாக தொடர்ந்து வைத்திருத்தல் என்பதினுடாக மனித உரிமைக்கு மாறாக இயங்கும் அரசாக இலங்கை தன்னைக் காட்டிக்கொள்கிறது. இன்னோரு புறம் தமிழ் அரசியல் கைதிகள் என்று தனியாக நடத்தும் அணுகும் பாராபட்சக் கொள்கை சார்ந்தும் இயங்கும் அரசாகவும் உள்ளது. இந்தப் போக்குகளில் இருந்து இலங்கை அரசு முற்றிலும் தம்மை விடுவித்து தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் மனிதாபிமானத்துடன் இயங்க வேண்டும்
இன்று தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாவரும் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. இது இன்றய காலத்தின் அவசரத் தேவையாகின்றது. இதனால் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தமிழ்த்தலைமைகள் மற்றும் தமிழ்ச்சட்டத்தரணிகள் யாவரும் தமிழ்க்கைதிகளின் விடுதலைக்காக ஒன்றிணைந்து உழைக்க முன்வர வேண்டும். தொடர்ந்து அரசை நிர்பந்திக்க வேண்டும். நடைமுறையில் உள்ள நிலவும் அரசியல் சட்ட நடைமுறைகள், இறுகிய ஏற்பாடுகள் யாவும் தமிழ்க்கைதிகளது விடுதலைக்கு விரோதமாக உள்ளது என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும்.
தமிழ்க் கைதிகளின் பிரச்சினைகளை மனிதாபிமான ரீதியில் மனிதவுரிமை விவகாரமாக அணுகக்கூடிய உரிய நடைமுறைகளை, புதிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவதற்கான நிர்ப்பந்தமும் போராட்டமும் அவசியமாக உள்ளது. இவற்றைச் சாத்தியப்படுத்த யாவரும் இணைந்து செயலாற்ற முன்வரவேண்டும்