கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட தான் முயற்சி செய்யவில்லை – குஷ்பு
கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட தான் முயற்சி செய்யவில்லை, தனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி எம்.பி-யாக இருந்த எச்.வசந்தகுமார் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அங்கு விரைவில் தேர்தல்
நடைபெற உள்ளது. அங்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் மோதின. மத்திய இணை அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணனை வீழ்த்தி வசந்தகுமார் வெற்றி பெற்றிருந்தார்.
தற்போது அங்கு போட்டியிட காங்கிரஸ் கட்சிக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. கட்சி மீது அதிருப்தி காரணமாக சமீப காலமாக பா.ஜ.க-வுக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வரும் குஷ்புவை சரி கட்ட அவரை கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. குஷ்பு கூட இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் என்றும் கூறப்பட்டது.
இது குறித்து டி.வி தொடர் பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “நான் கன்னியாகுமரியில் போட்டியிடப் போவதாக வெளியான தகவல் தவறானது. எனக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் கிடையாது. கட்சி என்ன பணி கொடுக்கிறதோ அதை செய்வேன். வேட்பாளர் யார் என்பதைப் பற்றி கட்சித் தலைமை முடிவெடுக்கும்” என்றார்.
கன்னியாகுமரியில் பெரும்பான்மையாக உள்ள சமூக மக்களின் வாக்குகள்தான் வெற்றியை தீர்மானிக்கும். எனவே, அந்த சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ்
தலைவர்கள் மத்தியில் சீட் வாங்குவதில் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் வசந்தகுமரின் மகன் கூட போட்டியிட விருப்பம் தெரிவித்துவிட்டு பின்னர் கட்சி சொன்னால் போட்டியிடுவேன் என்று பல்டி அடித்தார். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் தவிர்த்து வேறு யார் போட்டியிட்டாலும் அது பா.ஜ.க-வின் வெற்றியை உறுதி செய்துவிடும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியைப் போலவே, பாரதிய ஜனதா கட்சியிலும் கன்னியாகுமரி சீட்டை பெற போட்டி ஏற்பட்டுள்ளது. பொன் ராதாகிருஷ்ணன்தான் போட்டியிடுவார் என்று கன்னியாகுமரி பா.ஜ.க தொண்டர்கள் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்களும் போட்டியில் குதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.