குருந்தூர் மலையில் காவலரணே?
விகாரை அமைப்பு நடவடிக்கைகளை தடுக்க முல்லைத்தீவு குருந்தூர்மலையில், தொல்லியல் திணைக்களம் காவலரண் அமைப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று பணிப்புரை விடுத்துள்ளது.
அதேவேளை அப் பகுதியில் இன முறுகலை ஏற்படுத்துகின்ற வகையில், மதங்களுடன் தொடர்புடைய கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாதெனவும் மன்று உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே முல்லைத்தீவு – குருந்தூர் மலை தொடர்பாக இடம்பெற்ற வழக்கில், வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளையின் மூலம் குருந்தூர் மலைப் பகுதியில் உள்ளுர் மக்களாலோ பிக்குகளாலோ கட்டடங்கள் எவையும்; அமைக்க முடியாதென உத்தரவிடப்பட்டிருந்தது.
இருப்பினும் அண்மை நாட்களாக குருந்தூர் மலைப் பகுதியில் கட்டுமான வேலை ஒன்றினை முன்னெடுப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் முனைப்புக்காட்டி வந்திருந்தது.
இதை அறிந்த கோவில் நிர்வாகத்தினர் நேற்று (09.) முல்லைத்தீவு நீதிமன்றினை நாடியதுடன், நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து, முன்னைய வழக்கின் மூலம், தற்போது மேற்கொள்ளவுள்ள கட்டுமானம் தொடர்பில் விசாரணை செய்யுமாறு மன்றினை கோரியிருந்தனர்.
அதன் அடிப்படையில் இந்த வழக்கினை ஆராய்ந்த நீதிமன்று தொல்பொருள் திணைக்கள அதிகாரிக்கு அழைப்பாணை உத்தரவினைப் பிறப்பித்ததுடன், இன்றைய நாளுக்கு வழக்கு விசாரணைக்கான திகதியிடப்பட்டிருந்தது.
அதற்கமைய இன்றையநாள் கோவில் நிர்வாகத்தினர், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தொல்பொருள் திணைக்களத்தினர், காவல்துறையினர்; மன்றில் ஆஜராகியிருந்த நிலையில் இவ் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.
குறிப்பாக வழக்கு விசாரணையின்போது, காவலரண் அமைப்பதற்கான கட்டுமானங்களே தாம் மேற்கொள்ளவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தினரால் தெரிவிக்கப்பட்டதுடன், அவ்வாறு குருந்தூர் மலைப் பகுதியில் காவலரண் அமைப்பதற்கு மாவட்ட செயலகம், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் என்பன தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கிய அனுமதிப் பத்திரங்களை அவர்கள் மன்றிற்கு சமர்ப்பித்தனர்.
இரு தரப்பினரும் மதத்தோடு தொடர்புடைய எவ்வித கட்டுமானங்களையும் அங்கு மேற்கொள்ளப்போவதில்லை என்ற இணக்கத்தினை தொடர்வதெனவும், தொல்பொருள் திணைக்களம் அப் பகுதியில் எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதென ஒவ்வொருமுறையும் அது தொடர்பான அறிக்கைகளை மன்;றுக்கு சமர்ப்பிக் கவேண்டும் எனவும் இணக்கமான முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளது .