தலைவருடன் கைகொடுக்க ஏன் மகிந்த விரும்பினார்
கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்தனர் எனக் கூறும் மகிந்த ராஜபக்ச, 2005 ஆம் ஆண்டு அப்போதைய நோர்வேயைச் சேர்ந்த சமாதானத் தூதுவர் ஊடாக தேசியத் தலைவர் பிரபாகரனைச் சந்திக்க ஆசைப்பட்டது ஏன்?” என முன்னாள் நாடாளுமன்ற மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்
யாழ்ப்பாணத்தில் இன்று (08) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வளித்தமையை கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த பெருமை இலங்கைக்கு உரித்தாகுமென நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்த கருத்து தொடர்பில் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன்.
தமிழீழ விடுதலைப் புலிகள் கொடிய பயங்கரவாதிகளாக இருந்தால் ஏன் 2005 ஆம் ஆண்டு நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹேய்ம் ஊடாகத் தலைவர் பிரபாகரனைச் சந்திக்க விரும்பினீர்கள்?
அத்துடன், 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த காலத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தலைவர் பிரபாகரனுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றைச் செய்திருந்தார்.
இராணுவ உயர் அதிகாரிகளும் நாட்டின் அரசியல் தலைவர்களும் ஏன் தலைவர் பிரபாகரனைப் பாராட்டுகிறார்கள் எனவும் நான் கேட்க விரும்புகிறேன்” என்றார்