108 ஆம்புலன்ஸ் வாகனம் தீயில் எரிந்து நாசம் வாகனத்தில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்!
இலவச ஆம்புலன்ஸ் வாகனம் எதிர்பாராதவிதமாக தீ பிடித்து எரிந்தது. இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றது. இந்நிலையில், நேற்று முன் தினம் கொரோனா சிகிச்சைக்காக வந்த மூதாட்டி ஒருவருக்கு இதய பரிசோதனை செய்வதற்காக, அவரை 108 ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அவசர சிகிச்சை பிரிவு அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் கசிந்து திடீரென தீ பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென ஆம்புலன்ஸ் முழுவதும் பரவியது.
இதனால் ஆம்புலன்ஸ் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இதற்கிடையே, ஆம்புலன்சில் இருந்த கொரோனா சிகிச்சைக்காக வந்த மூதாட்டி, ஓட்டுநர் செல்வகுமார் மற்றும் உதவியாளர் அம்பிகா ஆகியோர் ஆம்புலன்சிலிருந்து வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து, தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதனால செங்கல்பட்டு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.