November 22, 2024

இதுவும் இனத்தின் கட்டமைப்பை சீரழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையா? – மு.தமிழ்ச்செல்வன்

அத்திபாரம் பலமாக இருந்தால்தான் கட்டடம் பலமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது. இவ்வாறுதான் ஒரு இனம் அல்லது சமூககத்தின் கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும் என்றால் அச்சமூகத்தின், இனத்தின் இளம் சமூகம் பலமாக இருக்க வேண்டும். ஒரு இனத்தின் இளம் சமூகத்தை சீரழித்துவிட்டால் போதும் அந்த இனம் எதிர்காலத்தில் அடையாளம் இன்றி, சீரழிந்து சின்னாபின்னமாகிவிடும்.இப்போது இங்கே விடயத்திற்கு வரும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் அதிலும் 2015 க்கு பின்னர் வடக்கில் அதிகரித்த போதைப் பொருள் பாவனை காணப்படுகிறது. கஞ்சா கசிப்பு என்று ஆரம்பித்த போதைப்பொருள் தற்போது ஹேரோயின் ஐஸ் என மாறியிருக்கிறது. முன்னர் தெற்கிலிருந்து நாட்டின் ஏனை பகுதிகளுக்கு போதை பொருள் கடத்தப்பட்டது. ஆனால் தற்போது வடக்கிலிருந்தே நாட்டின் ஏனைய பாகங்களுக்கு போதைப் பொருள் கடத்தப்பட்டு வருகிறது வடக்கின் கிழக்கு கடற்கரையோரம் இதன் பிரதான தளமாக காணப்படுகிறது.

இங்கே மிக முக்கியமான விடயம் இந்த போதைப்பொருள் பாவனையை அதிகரிக்க போதைப்பொருள் வியாபாரிகளால் இலக்கு வைக்கப்படுகின்றவர் தமிழ் இளம் சமூகமே அதிலும் மாணவர்கள் அதிலும் தரம் ஒன்பது தொடக்கம் உயர்தரம் வரை கல்வி கற்கும் மாணவர்களே. என்றுமில்லாத அளவுக்கு இளம் வடக்கின்; இளம் சமூகம் போதைப்பொருள் பாவனைக்கு உள்ளாகியுள்ளது. மிகவும் அதிர்ச்சி தரும் செய்திகளாகும். இது திட்டமிட்டு இனத்தின் இருப்பை அல்லது கட்டமைப்பை சீரழிக்க திட்டமிட்டு செயற்படுத்தப்படும் நிகழ்ச்சி நிரலா என்பதும் சந்தேகமே.

இந்தப் போதைப் பொருள் பாவனை வடக்கில் குறிப்பாக இளம் சமூகத்தின் மத்தியில் எவ்வாறு கொண்டு செல்லப்படுகிறது. என்பதனை இனி நோக்குவோம்.

ஆரம்ப காலங்களில் சுமார் 1900 க்கு முன்னர் பெண்கள் புகைப்பது மிக மிக அரிதாக இருந்தது. பெண்கள் புகைப்பதே இல்லை என்று கூட சொல்ல முடியும் எனவேபெண்களிடம் புகைப்பழகத்தை ஏற்படுத்துவதற்காக சம்மந்தப்பட்ட நிறுவனம் ஒன்று அமெரிக்காவில் ஒரு பேராசிரியரை சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கின்றார்கள்.

அந்தப் பேராசிரியர் இப்படியொரு ஆலோசனையை வழங்கியிருகின்றார் ஆதாவது பெண்களுக்கு சமவுரிமை இல்லை என்றும் சமத்துவம் பேணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒரு ஆர்ப்பாட்த்தை ஏற்பாடு செய்யுமமாறும் அப்போது தெரிவு செய்யப்பட்ட சில பெண்களிடம் சிகரட்டை கொடுத்து அவர்களை புகைக்க செர்லலியும் அதனை ஊடகங்களில் வரும் வண்ணம் பார்த்துக்கொள்ளவும் என்று.

பெண்களின் ஒடுக்குமுறைக்களுக்கு எதிராக ஆர்;ப்பாட்டமும் நடந்தது. ஆண்களுக்கு நிகராக பெண்கள் நடத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. அதேவேளை சிகரட் பிடிக்கும் பெண்களின் படமும் வெளிவந்தது. இதன் பின்னரே படிப்படியாக பெண்களும் புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானர்கள். இன்று அதிகளவில் பெண்கள் புகைப்பிடிக்கும் பழகத்திற்கு சென்றமைக்கு மேற்படி இந் நிகழ்வே வித்திட்டது என்றுக் கூறப்படுகிறது.

இவ்வாறுதான் இன்று இலங்கையில் போதைப்பொருள் விற்பனை செய்வோர் மாணவர்களை இலக்கு வைக்கின்றனர்.இதற்காக இவர்களை சில உத்திகளையும் கையாள்கின்றனர். இந்த உத்திகள் விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட முடிவுகள் போன்று காணப்படும். இதனால் மாணவர்கள் இலகுவில் போதைபொருள் பாவனைக்குள் சென்றுவிடுகின்றனர். போதைப்பொருள் வியாபாரிகள் வெற்றியும் பெறுகின்றனர். சமீபகாலமமாக வடக்கில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு,யாழ்ப்பாண மாவட்டங்களில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி தருபவையாகவுள்ளன.

போதைப்பொருள் வியாபாரிகளின் உத்திகள்

போதைப்பொருள் வியாபாரிகள் நன்கு திட்டமிட்டு, இலக்கு தவறாத வகையில் போதைப்பொருளுக்கு மாணவர்களை அடிமையாக்குகின்றனர். கிளிநொச்சியிலும் அதுவே இடம்பெற்று வருகிறது. கிளிநொச்சி மாவட்டம் வறுமையில் முன்னிலையில் உள்ளது, அதிகளவு பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வாழ்கின்ற மாவட்டம், பெற்றோர்கள் அல்லது தந்தை அல்லது தாயை இழந்த பிள்ளைகள் கனிசமான அளவினர் வாழ்கின்ற மாவட்டம், உள நெருக்கடி மிக்கவர்கள் அதிகமுள்ள மாவட்டம், தொழில் அற்ற இளம் சமூகம் அதிகமுள்ள மாவட்டம், பல குடும்பங்களில் குடும்ப உறவுகள் சீர்முகுலைந்துள்ளன. எனவே இதுவே போதைப்பொருள் வியாபாரிகளுக்கு தங்களின் வியாபாரத்தை பெருக்குவதற்கு காரணமாகவுள்ளது.

மேற்படி நிலைமைகளில் உள்ள குடும்பங்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்திற்கு அவர்களை ஈடுப்படுத்துகின்றனர். இதில் முக்கியமாக தொழிலின்றி இருக்கும் இளைஞர்களிடம் வருமான ஆசையினை காட்டி கடின உழைப்பு இன்றி ஆயிரக்கணக்கில் உழைக்க முடியும் ஆதாவது அதிகளவில் உழைக்க முடியும் குறுகிய காலத்தில் பணக்காரனாக மாறிவிடலாம் எனக் கூறி அவர்களை போதை பொருள் விற்பனையில் வீழ்த்துகின்றனர். அத்தோடு முதலில் இவர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்குகின்றனர். அதிலிருந்து அவர்கள் மீள முடியாத நிலை ஏற்பட்டு போதைப் பொருள் வாங்குவதற்கு பணம் இல்லாத நிலை ஏற்படும் போது பாவனையாளர்களை வியாபாரிகளாக மாற்றுகின்றனர் இதன் போது அவர்களிடம் கூறப்படுவது விற்பனை மூலம் வரும் பணத்தில் உனக்குத் தேவையான போதை பொருளையும் வாங்கிக்கொள் என்பதே. எனவே ஒருவர் அதன் பின்னர் விற்பனையாளராகவும், பாவனையாளராகவும் மாறுவதோடு, அதிக வருமானத்தை உழைக்க புதிய பாவனையாளர்களுக்கு வலை வீசுகின்றார்.

இதில் ஆபத்தானது மாணவர்கள் இலக்கு வைக்கப்படும் முறையே மாணவர்களிடையே நல்ல பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், விளையாட்டுகளில் சிறப்பாக செயற்படும் மாணவர்கள் ஆகியோரே இலக்கு வைக்கப்படுகின்றனர். இவர்களிடம் அவர்கள் தெரிவிப்பது. ‚குடு( ஹெரோயின்) பாவித்துவிட்டு உயர்தர கணித வகுப்பில் இருந்தால் எந்த கணக்கையும் இலுகுவாக செய்ய முடியும்‘ ‚மூளை எப்பொழுதும் புத்துணர்ச்சியோடு இருப்பதனால் நன்றாக படிக்க முடியும்‘ பாடசாலைகளில் இடம்பெறுகின்ற விளையாட்டுகளில் சிறப்பாக செயற்பட முடியும். போன்ற ஆசை வார்த்தைகளை கூறி பாடசாலைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், விளையாட்டில் சிறப்பாக செயற்படுகின்ற மாணவர்களை இலக்கு வைக்கின்றனர். இதற்காக மாணவர்களின் குடும்ப பின்னணி கூட ஆராயப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியில் நடந்தது என்ன?

கிளிநொச்சி கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு சனிக்கிழமை இரண்டு பிரபல பாடசாலைகளை சேர்ந்த கணிதம் மற்றும் உயிரியல் பிரிவில் கற்கும் நான்கு மாணவர்கள் ஒரு தனியார் கல்வி நிலையம் வகுப்பு நிறைவுற்றதும அதே வீதியில் வைத்து கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவரிடம் ( அவர் கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது) 5000 ரூபா பணத்தை கொடுத்து 80 மில்லிக் கிராம் குடுவை (ஹெரோயின்) வாங்கியிருகின்றார்கள். வாங்கியவர்கள் அங்கிருந்து மத்திய ஆரம்ப வித்தியாலய வளாகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு இன்றுவரை பயன்படுத்தபடாதுள்ள மலசலக் கூடத்திற்கு ஒதுங்கியுள்ளனர்.

விசேட பொலீஸ் பிரிவால் கைது

இந்த நான்கு மாணவர்களும் குறித்த மலசல கூடத்தை அடைந்து சில நிமிடங்களில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிபொலீஸ் மா அதிபரின் விசேட பொலீஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலீஸ் அதிகாரி சத்துரங்க தலைமையில் குறித்த இடத்திற்கு பொலீஸார் விரைந்து சென்று 80 மில்லிக் கிராம் குடுவுடன் மாணவர்களை கைது செய்து கிளிநொச்சி பொலீஸாரிம் ஒப்படைந்தனர். பின்னர் மறுநாள் ஞாயிற்றுக் கிழமை அவர்கள் கிளிநொச்சி நீதவான் நீதி மன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் குடும்ப பின்னணி

கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் 2020 உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஒருவர் 18 வயதும் ஏனையவர்களுக்கு 19 வயது. இவர்களில் ஒரு மாணவனை தவிர ஏனையவர்களின் பெறுபேறுகள் 7ஏ,8ஏ, என காணப்படுகிறது. மற்றவரின் பெறுபேறும் இவ்வாறு இல்லை எனில் நல்ல பெறுபேற்றைக்கொண்ட மாணவன் அவர். அவர் உயிரியல் பிரிவில் கல்வி கற்கின்றான்.

இந்த மாணவர்களில் ஒருவரின் தந்தை பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர், தந்;தையின் குடும்ப வழி கல்வித்துறையில் மாகாண மட்டத்தில் உயரதிகாரிகள் தொடக்கம் பிரபல ஆசிரியர்கள். மற்றொரு மாணவனின் தந்தை பிரபல வர்த்தகர், இன்னொரு மாணவனின் தந்தை மலேசியாவில் பணியாற்றுகின்றார். மற்றமாணவனின் தந்தை கொழும்பில் தொலைக்காட்சி திருத்தும் தொழிநுட்ப பணியில் இருக்கின்றார்.