சி.விக்கு கைகொடுக்க தேசியம் பேசுபவர்கள் தயாரா?
நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியத்தின் பாதுகாவலர்களாக தங்களைக் கருதக்கூடியவர்கள் விக்னேஸ்வரன் கருத்துக்கு சாதகமாக ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. ஆனால் இது தொடர்பாக ஆரம்பதில் யாரும் வாய் திறக்கவில்லை. பத்திரிகைகளின் செய்திகளுக்கு பிற்பாடு ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில கருத்துக்களை கூறினாலும் கூட இந்தக் கருத்துக்கு சாதாகமாக ஆணித்தரமாக பாராளுமன்றத்தில் ஒட்டு மொத்தமாக தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் குரல் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணை பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.
தேர்தல் முடிந்து நாடாளுமன்றம் தனது கூட்டத் தொடர்களை ஆரம்பித்துள்ளது. நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரன் ஐயா கூறிய சில கருத்துக்கள் சிங்கள பௌத்த பேரினவாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களாக உள்ளன. உண்மைக்குப் புறம்பான எதையும் அவர் பேசவில்லை. அவர் பேசியது என்பது தமிழ் என்பது உலகத்தின் தொன்மையான மொழி உலகத்தில் முதன்மையான மொழி இலங்கையில் தமிழ் மக்கள் பூர்வீகமாக குடி மக்களாக இருக்கின்றார்கள். அவ்வாறான ஒரு மொழியால் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகரை வாழ்த்துவதில் தான் பெருமைப்படுவதாகக் கூறியிருந்தார். இந்த இனத்துக்கு சுய நிர்ணய உரிமை, இiறாயண்மை என்பன இருக்கின்றது என்பதைக் கூறியிருந்தார்.
இந்த விடயம் தான் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயமாக இருக்கின்றது. விக்னேஸ்வரன் ஐயாவின் கருத்து சிங்கள, தமிழ் சர்வதேச வரலாற்றாசிரியர்களைப் பொறுத்தவரையில் அது பிழையான கருத்து அல்ல. ஆகவே, அது பிழையான கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுவார்களாக இருந்தால் தமது சரியான கருத்துக்களை நாடாளுமன்றத்தில் கூறி அதனை ஹன்சாட்டில் பதிவு செய்ய முடியும். அதனை விடுத்து ஹன்சாட்டில் இருந்து நீக்கும் படி கூறுவது என்பது முதலில் நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடிய பேசுவதற்கான சுதந்திரத்தை மறுதலிப்பதாகும். அதனை சபாநாயகர் ஏற்றுக் கொள்ள வில்லை என்பதும் பாராட்டப்படக் கூடிய விடயம்.
சிங்கள ஊடகங்களிலும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியில் இருக்ககூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சல சலப்புக்களை ஏற்படுத்தி விக்னேஸ்வரன் ஒரு பிரிவினைவாதி என்றும் இனவாதி என்றும் இவர் நாடாளுமன்றத்தில் இருக்க கூடாது என்றும் விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்றும் பிரபாகரன், அமிர்தலிங்கம் போன்றோருக்கு ஏற்பட்ட கதியே இவருக்கு ஏற்படும் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உட்பட பலர் நாடாளுமன்றத்தில் மிக மோசமான முறையில் தமது வார்த்தைப் பிரயோகங்களை கூறிவருகின்றார்கள்.