November 22, 2024

19 ஆவது திருத்தத்தை அரசு இல்லாதொழிக்க முயல்கிறது! இது ஜனநாயக விரோத செயல்!

ஜனநாயகத்தை மேம்படுத்தவே நாம் 19 ஆவது திருத்தத்தை உருவாக்கினோம். தற்போதைய அரசு இதை இல்லாதொழிக்க முயல்கிறது. இது நாட்டுக்குக் கேடு, ஜனநாயக விரோத செயல். இதை நாங்கள் எதிர்ப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

வடமராட்சியில் தனது அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்-

எமக்கு முன்பாக பாரிய சவால் உள்ளது. எந்த மோசமான ஆட்சியாளர்களை வீழ்த்தினோமென மார்தட்டினோமோ, அவர்கள் அதைவிட மோசமான விதத்தில், அதிக பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஒரே தேர்தலில் பெற்றுள்ளனர்.

யுத்த வெற்றிக்கு பின்னர் வந்த 2010 தேர்தலில் கூட, மூன்றில் இரண்டை பெறவில்லை. பின்னர் பணம் கொடுத்து பெற்றனர். எங்களது பலம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது புதிய அரசமைப்பை உருவாக்க அரசு முயற்சிக்கிறது. அதற்கு முன்னதாக 19 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்து, 20 ஆவது திருத்தத்தை கொண்டுவர முயற்சிக்கிறார்கள். மிக விரைவாக அதை செய்கிறார்கள். சட்டமா அதிபருக்கு வரைவைச் சென்ற வாரமே அனுப்பிவிட்டனர். சட்டமா அதிபர், சர்வஜன வாக்கெடுப்பின்றி நிறைவேற்றக்கூடியது எனத் தனது கருத்தைச் சொல்லியுள்ளார்.

2015ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்தி, 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவர நான்கைந்து மாதங்களுக்கு மேல் சென்றது. அது 18 ஆவது திருத்தத்தை அகற்றி, 17ஆவது திருத்தத்தை கொண்டு வருவதுதான். ஆனால் நான்கைந்து மாதங்கள் எடுத்தது. இவர்களுக்கு நான்கைந்து வாரங்கள் கூடத் தேவையில்லை. சிலருக்கு சரியானதைச் செய்வதற்கு பயம். இவர்களுக்கோ பிழையானதை செய்யவும்பயமே கிடையாது. அப்படியான அரசையே எதிர்கொள்கிறோம் .