November 22, 2024

சி.விக்கு தோள் கொடுப்பது காலத்தின் தேவை!

 

சி.வி.விக்கினேஸ்வரனின் நாடாளுமன்ற உரைகள் காலத்தின் தேவையென தெரிவித்துள்ளார் செயற்பாட்டாளர் இந்திரன் ரவீந்திரன்.

இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள அவர் நாடாளுமன்றத்தில் செல்வநாயகமும், அமிர்தலிங்கமும், ஜி.ஜி பொன்னம்பலமும், ஏன் பண்டாரா நாயக்க கூட தமிழ், தமிழர் என்று பேசியிருக்கிறார்கள்.

இருந்தும் தமிழ் மக்கள் அடைந்திருப்பது ஒன்றுமில்லை என்பதும் நாடாளுமன்ற உரைகளால் இதுவரை எந்தப் பயனும் விளைந்ததில்லை என்பதும் தமிழ் மக்களின் அனுபவம்.

பனிப்போர் காலம், பனிப்போரின் பின்னான காலம், பனிப்போரின் பின் பின்னான காலம், கொரோனாவின் பின்னான காலம் என மாறிவரும் உலக ஒழுங்கிற்குள் மேற்படி உரைகளையும் செயற்பாடுகளையும் பொருத்திப்பார்த்து ஆய்வு செய்தால் இதுவரை தமிழ் மக்களின் அரசியலிலும் உரைகளிலும் பயன் விளையாததன் காரணத்தைக் கண்டடைய முடியும்.

தற்போது விக்னேஸ்வரனின் உரை கொரோனாவின் பின்னான உலக ஒழுங்கில் முள்ளிவாய்க்காலின் பின்னான பெருத்த இடைவெளியின் பின் நிகழ்ந்திருக்கிறது.

கூடவே எல்லாவல மேதானந்த தேரர் போன்றவர்களின் கருத்தியல் விதைப்பினதும், வடக்கு கிழக்கை மையப்படுத்தி பௌத்த சின்னங்களைத் தேடி சிங்களவர்கள்தான் ஆதிக்குடிகள் என்று நிறுவ முற்படும் அரசின் செயற்திட்டங்களினதும், சிங்களவர்கள் அல்லாதவர்கள் வந்தேறு குடிகள் என்ற சிங்கள மகாவம்ச மனநிலை இராட்சத தேசியவாதமாக முகிழ்ந்திருக்கையிலுமான பின்னணியிலும் சூழலிலும் நிகழ்ந்திருக்கிறது.

தகவல் தொழில் நுட்பத்தால் உலகம் கிராமமாக சுருங்கிய காலத்தில் நிகழ்ந்திருக்கிறது. உலக அரசியல் போக்கு இந்து சமுத்திரத்திலும் பசுபிக் சமுத்திரத்திலும் மையம் கொண்டிருக்கையில் நிகழ்ந்திருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் மக்களை ஆயுத ரீதியா அழித்து பின் அரசியல் ரீதியாக சிதைத்து இறுதியாக வரலாற்று ரீதியாக இல்லாதொழிக்கும் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்திருக்கிறது.

அது நிகழ்ந்த இடம் இலங்கை நாடாளுமன்றம் என்பதற்கும் யாரின் பிரதிநிதியாக பேசியிருக்கிறார் என்பதற்கும் தனித்தனி பெறுமதிகள் உண்டு.

அவ்வாறு பல வகையில் இந்த உரையிற்கும் முன்னைய உரைகளிற்குமான கனபரிமானங்களும் விளைவுகளும் வேறுபடும்.

கூடவே கோரோனாவின் பின்னான உலக ஒழுங்கில் இலங்கைத் தீவைப்பொறுத்தவரை இனப்படுகொலைக்காண பரிகார நீதி வேண்டிய அரசியலிற்கான இடத்தைவிட பாரம்பரியத்தாயகம் என்ற அரசியலிற்கு ஒப்பீட்டளவில் ஒருபடி அதிக இடமுண்டு.

அந்த வகையில் விக்னேஸ்வரன் பேசிய பேச்சை டக்லஸ்தேவானந்தாவோ, சுமந்திரனோ, சம்பந்தரோ, கஜேந்திரகுமாரோ யார் பேசியிருந்தாலும் ஆதரிக்கவேண்டியது தமிழ் மக்களிற்கு அவசியமானது. (அவர்கள் வேறு ஏதாவது உள்நோக்கத்திற்காக பேசியிருந்தாலும் கூட)

மாறாக அவரின் பேச்சுக்கும் செயலிற்கும் பொருத்தமில்லை என்று மட்டும் விமர்சிப்பதும் முன்னைய உரைகளால் விளையாத பயனைச் சுட்டிக்காட்டி எள்ளி நகையாடுவதும், எந்தவிதத்திலும் விஞ்ஞான பூர்வமானதாகவோ அறிவியல் பூர்வமானதாகவோ அமையாது.

அவ்வாறு விஞ்ஞான பூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் அமையாத விமர்சனங்களைச் செய்பவர்கள் மல்லாக்கப்படுத்திருந்து விக்னேஸ்வரன்மீது துப்புவதாய் நினைத்துத் துப்பிக்கொண்டிருக்கிறார்கள். அது அவர்கள் அணிந்திருக்கும் முகமூடிகளையும் தாண்டி முகங்களிலும் வழிந்துகொண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.