தமிழர்கள் கள்ளத் தோணிகளும் அல்ல புலிகள் பயங்கரவாதிகளும் அல்ல – சிங்களச் செவ்வியில் விக்கி
தமிழ் மக்கள் கள்ளத் தோணியில் வந்தவர்களும் அல்ல, விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளும் அல்ல என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் சிங்களத் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் சிங்களத் தொலைக்காட்சி நேர்காணலில் மேலும் தெரிவித்தாவது,
‘தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டதால் அவர்கள் ஆயுதம் ஏந்த தூண்டப்பட்டனர். இலங்கைத்தீவின் ஆதிக்குடிகள் தமிழர்கள். இதை உறுதிப்படுத்த என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. 80 வயதான நான் இன்றோ நாளையோ சாவை எதிர்பார்த்திருப்பவன். உண்மையை உரக்க கூற நான் அஞ்சப்போவதில்லல். முள்ளிவாய்க்காலில் யுத்த சூனிய வலயம் என அறிவித்துவிட்டு , குண்டுகள் போட்டு கொன்றொழிக்கப்பட்டது அப்பாவி தமிழ் பொதுமக்களே. எனது வாக்குகளுக்காக நான் பணமோ , சாராயமோ யாருக்கும் கொடுக்கவில்லை. அபிவிருத்தி வேண்டும் என்பதற்காக , தமிழரின் அரசியற் பிரச்சனையை புறந்தள்ள முடியாது.’