November 22, 2024

சீன எல்லைப்பகுதியில் இந்திய போர்க் கப்பல்! பயிற்சியில் ஈடுபடுவதால் பதற்றம்;

சீனாவின் எதிர்ப்பை மீறி, இந்தியா சத்தமில்லாமல் ஒரு போர்க்கப்பலை தென்சீனக் கடலில் நிறுத்தியுள்ளது. தென் சீனக் கடலின் இந்த பகுதியில் இந்திய கடற்படை கப்பல்களை நிறுத்த சீன மக்கள் விடுதலை இராணுவம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ஜூன் 15 ம் தேதி கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில்,  சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட வன்முறை மோதலுக்குப் பிறகு, இந்திய கடற்படை  எடுத்துள்ள்ள முக்கிய நடவடிக்கை இது. தென் சீனக் கடலில் இந்தியா போர் கப்பலை நிறுத்த, சீனா ஆட்சேபம் தெரிவித்து வருவதை பொருட்படுத்தாமல், இந்தியா சத்தமில்லாமல், ஒரு போர்க்கப்பலை நிறுத்தியது. 2009 முதல், இப்பகுதியில் இராணுவம் மற்றும் செயற்கை தீவுகளைப் பயன்படுத்தி சீனா கணிசமாக தனது பகுதிகளை விரிவுபடுத்தியுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வன்முறை மோதல்களில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பின் இந்தியா சீனா இடையிலான பதற்றம் அதிகரித்துக் கொண்டே வந்தது.பின்னர் ஒரு கட்டத்தில், இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை கண்டு சீன படைகள் பின் வாங்கின. படைகளை விலக்கிக் கொள்வதாக சீன அரசு கூறி வரும் போதிலும், சீனா அதை செயலில் முழுமையாக காட்டவில்லை.

இந்நிலையில் தான், சீனாவின் எதிர்ப்பையும் மீறி, இந்தியா தென் சீனக் கடலில் ஒரு போர்க்கப்பலை நிறுத்தியுள்ளது.

சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு அருகே உள்ள மலாக்கா நீரிணையிலும் இந்திய போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் மலாக்கா நீரிணையில், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் ஆளில்லா கருவிகள் மூலம் சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் கடற்படை தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கடற்படை தனது மிக் -29 கே போர் விமானத்தை ஒரு முக்கியமான விமானப்படை தளத்தில் நிறுத்தியுள்ளது, அங்கு அவர்கள் நிலம் மற்றும் மலைப்பகுதிகளில் மேற்கொள்ளும் தாக்குதல் தொடர்பான பயிற்சியை வருகின்றனர்.