November 27, 2024

உலகின் கவனம்: பேரணியில், மகனை இழந்த தாய் தற்கொலை?

யாழில் நீண்ட இடைவெளியின் பின்னராக கட்சி பேதங்களை கடந்து யாழில் முன்னெடுக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்

உறவினர்களது  கவனயீர்ப்பு போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.இதனிடையே போராட்டம் யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தில் புறப்பட்டு மாவட்ட செயலகத்தை சென்றடைந்திருந்த நிலையில் தாய் ஒருவர் பகிரங்க வெளியில் கயிற்றை கழுத்திலிட்டு தற்கொலைக்கு முயன்றமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

எனினும் நீண்ட பிரயத்தனத்தின் மத்தியில் உயிருடன் காப்பாற்றப்பட்ட அவர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிண்றது அந்த வகையில், இன்று காலை 11 மணிக்கு வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக வடமாகாணத்திற்கான மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் யாழ்.நகரில் நடைபெற்றது.

இறுதி யுத்தத்திற்கு முன்னரும் யுத்தத்தின் போதும் பலர் கைது செய்யப்பட்டும், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டும் காணமாலாக்கப்பட்டுள்ளனர் என தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறததோடு பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டோர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களினை கண்டுப்பிடித்து தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயகமெங்கும் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்களாகியும் காணமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கு எங்கும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமக்கான நீதி இதுவரை கிடைக்காததனையடுத்து தமது உறவுகள் தொடர்பாக நீதி வழங்குமாறு சர்வதேசத்திடம் வலியுறுத்தி இன்று வடக்கு, கிழக்கில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய இன்று வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியை ஆரம்பித்து மாவட்ட செயலகம் முன்னதாக அதனை முடித்திருந்தனர்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கிழக்கு மாகாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.