November 24, 2024

வித்தியா படுகொலை வழக்கு! வடக்கின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் சேவையில்?

வித்தியா படுகொலை வழக்கு! வடக்கின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் சேவையில்?

பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, வடக்கின் முன்னைய நாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த லலித் ஜயசிங்கவை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதில் சிக்கல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் சட்ட மா அதிபரின் நிலைமைப்பாட்டை எதிர்வரும் 31ம் திகதி ஆணைக் குழுவுக்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

யாழ். புங்குடுதீவில் பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளியான சுவிஸ் குமார் எனும் மகாலிங்கம் சிவகுமார் தப்பி கொழும்புக்கு செல்ல உதவி புரிந்ததாக , அப்போதைய வடக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மீது குற்றம் சுமத்தப்ப்ட்டது.

அது தொடர்பில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் தொடர்ந்தும் அவர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியாகவே உள்ளார்.

இந் நிலையில், அரசியல் பழிவாங்கும் நோக்கில் தாம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக லலித் ஜயசிங்க, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து, தனது சட்டத்தரணியான மகேஷ் கொட்டுவெல்ல ஊடாக நேற்று அறிவித்தார்.

அத்துடன் தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான பணிப்புரையை விடுக்குமாறும் அவர் சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

எனது சேவை பெறுநர் ஓய்வு பெறுவதற்கு 11 மாதங்களே எஞ்சியுள்ளது. இந் நிலையில் அவரை சேவையில் மீளவும் இணைத்துக்கொள்ளுமாறு தேசிய பொலிஸ் ஆணைக் குழ்வுக்கு இடைக்கால உத்தர்வொன்றினை பிறப்பிக்கவும்.’ என சட்டத்தரணி மகேஷ் கொட்டுவெல்ல ஆணைக் குழுவைக் கோரினார்.

இந்நிலையிலேயே இந்த கோரிக்கை தொடர்பான நிலைப்பாட்டை எதிர்வரும் 31ம் திகதி அறிவிப்பதாக அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை ஆராய்ந்து அறிவிப்பதாக, சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹாந்த அபேசூரிய ஆணைக் குழுவுக்கு அறிவித்த நிலையிலேயே, அதனை நாளை மறுநாள் திங்கட் கிழமை ஆணைக் குழுவுக்கு அறிவிக்குமாறு ஆணைக் குழு அறிவித்தது.