சஜித்துடன் இணைந்த ஐ தே கட்சியின் முக்கியஸ்தர்
ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் புத்தளம் நகர சபைத் தலைவருமான எம்.என்.எம்.நஸ்மி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்று உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.
எதிர்க் கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவை இன்று காலை கொழும்பில் சந்தித்த அவர், தனது ஆதரவினை தெரிவித்ததுடன், அக்கட்சியின் அங்கத்துவப் படிவத்தையும் பெற்றுக்கொண்டார்.
கடந்த 6 வருடங்களுக்கும் மேல் ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளராக செயற்பட்டு வந்த முன்னாள் புத்தளம் நகர சபைத் தலைவருமான எம்.என்.எம்.நஸ்மி, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டார்.
முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்கள் விடயத்தில் ஐ.தே.க பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை போன்ற அதிருப்த்தியடைந்துள்ளமையினாலேயே பலரது கோரிக்கைக்கு அமைய தான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை வலுப்படுத்த இன்று முதல் பல வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதுடன், புத்தளத்தில் வாழும் சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.