November 24, 2024

சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இதுவே சரியான தருணம்?


இனப்பிரச்சினை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இதுவே சரியான தருணம்: பாராளுமன்றத்தில் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்

தமிழ் மக்கள் அரசியல் இலக்குகளில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்றும் பொருளாதார சலுகைகளையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசாங்க உறுப்பினர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களை மிகவும் லாவகமாக கையாண்டு பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (ஆங்கிலத்தில்) உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன், நீங்கள் சொல்வது உண்மையானால் „வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதுதொடர்பில் சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம் “ என்று கோரிக்கை விடுத்தார்.
இடைக்காலக் கணக்கறிக்கை பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன், “  ஒற்றை ஆட்சியின் கீழ் பொருளாதார நலன்கள் மட்டுமே அவர்களுக்கு வேண்டும் என்று மக்கள் தீர்மானித்தால் நான் அரசியலில் இருந்து உடனே விலகி விடுவேன். இல்லையென்றால், எமது தலைவர்கள் புதிதாகச் சிந்தித்து அரசியல் மேதகைப் பண்புகளுக்குரிய முடிவுகளை எடுத்து எமது இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். ஆகவே, ‚எமக்கான அதிகாரத்தையும் அங்கீகாரத்தையும் தாருங்கள். நாம் ஏனையோருடன் இணைந்து இந்த நாட்டை அமைதியும் செழிப்பும் மிக்கதாக ஆக்குவோம்‘ என்று கூறினார்.
நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்று ஜனாதிபதி மற்றும் அரசாங்க தரப்பினர் மேற்கொண்டுவரும் வாதங்களுக்கு தக்க பதிலடி கொடுத்த விக்னேஸ்வரன்,  „சுதந்திரத்துக்கு பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு கட்சிகளுமே இனப்பிரச்சனை இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன.  சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டன.   யுத்த நிறுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட கால இன முரண்பாட்டின் ஒரு இடை வெளிப்பாடாகவே விடுதலைப்புலிகள் தோன்றினார்கள். இன்று  விடுதலைப்புலிகள் இல்லை என்ற காரணத்துக்காக இனப்பிரச்சினை இல்லை என்று ஆகிவிடாது.“ என்று நாட்டில் இனப்பிரச்சினைதான் இருக்கிறது என்று வாதிட்டார்.
அத்துடன்,  இனப்பிரச்சினைக்கு  சரியான மருந்து சமஷ்டி முறைமையே ஆகும் என்று அழுத்தம் திருத்தமாக தனது உரையில் தெரிவித்த விக்னேஸ்வரன், „தயவுசெய்து இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள். ஆபத்தை உணரும்போது, தீக்கோழி தனது தலையை மணலில் புதைத்துக் கொள்வதுபோல பிரச்சினைகள் இருக்கும்போது அவை இல்லை என்று கூறி அவற்றில் இருந்து விலகி ஓடுவது  முட்டாள்த்தனமானது. நாம் எல்லோரும் ஒன்றிணைந்து இனப்பிரச்சினையை எதிர்கொள்வோம்.  உங்களின் இந்த பொறுப்பை தட்டிக்கழித்து அதனை எமது வருங்கால வாரிசுகளிடம் விட்டுவிடாதீர்கள். யுத்தத்தை வெல்வது இலகுவானது. ஆனால், சமாதானத்தை வெல்வது கடினமானது. சமாதானமே நிரந்தரமான வெற்றியை ஏற்படுத்தவல்லது.  இந்தப் புரிதலே அசோக மன்னன் பௌத்தத்தை தழுவக் காரணமானது.“ என்று எடுத்துக்கூறினார். கூறினார்.
விக்னேஸ்வரன் அங்கு மேலும் பேசியதாவது,
தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் இந்த இடைக்கால கணக்கறிக்கை  தொடர்பில் அதிகம் கூறிக்கொள்வதற்கு எதுவும் இல்லை.  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உதவும் வகையில் என்றைக்கும் எந்த அரசாங்கமும்  நிரந்தர பொருளாதார நலன்களை எமது மக்களுக்கு வழங்கவில்லை. அதேபோல, தமது பொருளாதார பிரச்சினைகளை கையாளுவதற்கான பொருளாதார அதிகாரமும் எமது மக்களின் கைகளில் இல்லை. சட்ட ரீதியான முதலமைச்சர் நிதியங்கள் கூட வடக்கு, கிழக்கு மாகாண  சபைகளுக்கு மறுக்கப்பட்டன. அதனால், இன்றைய இந்த விவாதத்தில் எமது மக்களுக்கான நிலையான பொருளாதார வாய்ப்புக்களையும் வழிகளையும் ஏற்படுத்துவதற்கான அடிப்படை விடயமான இனப்பிரச்சினை தீர்வு பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துகொள்வது பொருத்தமானது என்று கருதுகின்றேன்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்திருக்கும் கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு இந்த நாட்டில் நிலையான சமாதானத்தையும்  சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கு மிகவும் நீண்ட காலத்தின் பின்னர் பொன்னான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.  ‚ஒருமித்த‘ நாட்டுக்குப் பதிலாக ‚ஐக்கிய‘ நாட்டை கட்டியெழுப்புவதன் மூலம், 10 ட்ரில்லியன் சர்வதேச கடன் இருக்கின்றபோதிலுங் கூட, இந்த நாட்டை  இந்த உலகின் சொர்க்க பூமியாக உங்களால் மாற்ற முடியும். இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு  சரியான மருந்து சமஷ்டி முறைமையே ஆகும். தயவுசெய்து இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள். ஆபத்தை உணரும்போது, தீக்கோழி தனது தலையை மணலில் புதைத்துக் கொள்வதுபோல பிரச்சினைகள் இருக்கும்போது அவை இல்லை என்று கூறி அவற்றில் இருந்து விலகி ஓடுவது  முட்டாள்த்தனமானது. நாம் எல்லோரும் ஒன்றிணைந்து இனப்பிரச்சினையை எதிர்கொள்வோம்.  உங்களின் இந்த பொறுப்பை தட்டிக்கழித்து அதனை எமது வருங்கால வாரிசுகளிடம் விட்டுவிடாதீர்கள். யுத்தத்தை வெல்வது இலகுவானது. ஆனால், சமாதானத்தை வெல்வது கடினமானது. சமாதானமே நிரந்தரமான வெற்றியை ஏற்படுத்தவல்லது.  இந்தப் புரிதலே அசோக மன்னன் பௌத்தத்தை தழுவக் காரணமானது.
இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்றும் பொருளாதார பிரச்சினை மட்டுமே இருக்கின்றது என்றும் கூறிவரும் உங்களில் சிலரின் விதண்டாவாதத்தை தயவுசெய்து விட்டுவிடுங்கள்.  சுதந்திரத்துக்கு பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு கட்சிகளுமே இனப்பிரச்சனை இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன.  சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டன.   யுத்த நிறுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட கால இன முரண்பாட்டின் ஒரு இடை வெளிப்பாடாகவே விடுதலைப்புலிகள் தோன்றினார்கள். இன்று  விடுதலைப்புலிகள் இல்லை என்ற காரணத்துக்காக இனப்பிரச்சினை இல்லை என்று ஆகிவிடாது.
சபாநாயகர் அவர்களே நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நாம் ஏன் பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரத்துக்காகப் போராடினோம்? பிரித்தானிய இலத்தீன் போது அமைதியுடனும் செழிப்புடனும்  இருந்தோம். உண்மையில், லீ குவான் யூ சிங்கப்பூரை மற்றொரு சிலோனாக மாற்றுவதாக உறுதிபூண்டிருந்தார். பிரித்தானியர்களின் கீழ் அந்தளவு அமைதியும் வளமும் உள்ள நாடாக இலங்கை இருந்தது. ஆனால் அவ்வாறு இருந்தும் நாம் சுதந்திரத்துக்காகப் போராடினோம். ஏன்? எம்மை உருவாக்கிய எமது மொழி, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை உயிர்ப்பாக வைத்திருப்பதற்காகவே நாம் பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட முடிவெடுத்தோம்.
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் சரியாக இதேபோன்ற இக்கட்டான ஒரு நிலையில் தான் இருக்கிறார்கள். நாம் சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் கீழ் இன்று இருக்கின்றோம். இந்தியாவில் மகாத்மா காந்தி ஒரு வழியில் எமக்கான சுதந்திரத்தையும் பெற்றுக்கொடுத்ததால் நாங்கள் பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு ஆயுதங்களை ஏந்த வேண்டி இருக்கவில்லை.  ஆனால், சிங்கள பௌத்த அரசாங்கத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து விடுபடுவதற்கு எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்த  வேண்டி இருந்தது.
வடக்கு கிழக்கின் அரசியல், சமூக வரையறைகளை நான் நன்கு அறிவேன். நாடு முழுவதிலும், நீதித்துறையில் பணியாற்றியபின்னர், வட மாகாண சபையின் நிறைவேற்று முதலமைச்சராக சேவையாற்றுவதற்கு அழைக்கப்பட்டேன். இப்பொழுது நான் நாடு முழுவதுக்குமான சட்டவாக்கவாளர்கள் குழுவின் ஒரு உறுப்பினர். ஆகவே, எனது 80 வருட கால வாழ்க்கையில் அரசாங்க இயந்திரத்தின் மூன்று பகுதிகளிலும் நான் பணியாற்றி இருக்கின்றேன். எனது இந்த நீண்ட பயணத்தில்  புற அலகுகள் மீதான மத்திய அரசாங்கத்தின்  ஆதிக்கம் காரணமாக உள்ளார்ந்த ஏற்பட்ட குறைபாடுகளை நான் அறிவேன்.
தமிழ் மக்கள் அரசியல் இலக்குகளில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்றும் பொருளாதார சலுகைகளையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் தேர்தல் முடிவடைந்த பின்னர் சிலர் கூற விழைந்துள்ளார்கள். அது உண்மையானால், வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதுதொடர்பில் சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம். ஒற்றை ஆட்சியின் கீழ் பொருளாதார நலன்கள் மட்டுமே அவர்களுக்கு வேண்டும் என்று மக்கள் தீர்மானித்தால் நான் அரசியலில் இருந்து உடனே விலகி விடுவேன். இல்லையென்றால், எமது தலைவர்கள் புதிதாகச் சிந்தித்து அரசியல் மேதகைப் பண்புகளுக்குரிய முடிவுகளை எடுத்து எமது இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.
ஆகவே, ‚எமக்கான அதிகாரத்தையும் அங்கீகாரத்தையும் தாருங்கள். நாம் ஏனையோருடன் இணைந்து இந்த நாட்டை அமைதியும் செழிப்பும் மிக்கதாக ஆக்குவோம்‘