புலனாய்வு துறையால் முடியாது: திட்டமிட்டபடி போராட்டம்?
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது போராட்டத்தை சிதைக்க முற்படும் அரச புலனாய்வுக்கு துணை செல்பவர்களிடம் எச்சரிக்கையா இருக்குமாறு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் கோரியுள்ளன.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்கள் நாம் கடந்த 11வருடங்களுக்கும் மேலாக சிங்கள இராணுவத்தாலும், அதன் துணைக் குழுக்களாலும் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி போராடி வருவதும், கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக (இன்று 1286வது நாள்) தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருவது நீங்கள் அறிந்ததே.
ஏனெனில் உங்களது பங்களிப்புடனேயே நாம் கிளிநொச்சி போராட்டத்தின் 100வது நாளில் எமது போராட்டத்தைக் கண்டு கொள்ளாதிருந்த அரசை திரும்பிப் பார்க்க வைக்க ஏ9 வீதியை சுமார் 6 மணித்தியாலங்கள் போக்குவரத்தைத் தடைசெய்து போராடி வெற்றி பெற்றோம்.
அதே போல் 500வது நாள்,மற்றும் 25.02.2019 நாளில் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட போராட்டம், 1000 ஆவது நாள் மற்றும் முல்லைத்தீவிலும் மார்ச் 2019,ல் மட்டக்களப்பில் 1000 மேற்பட்டோருடனும் 30.08.2019இல் கல்முனையிலுமாக வட-கிழக்கு தழுவிய 8 மாவட்டங்களிலும் போராட்டங்களை உங்கள் அனைவரதும் ஆதரவுடனேயே செய்து சர்வதேசத்தை எங்கள் பக்கம் திரும்ப வைத்தோம்.
2017 நவம்பர் 16ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடனான சந்திப்பின் போது அவருக்கு நேரடியாகவே ‚இலங்கை அரசிடமிருந்து நீதி கிடைக்காது, நாம் சர்வதேசத்திடம் நீதி கோரப்போகின்றோம்‘ என்று அறிவித்த நாளிலிருந்து நாம் சர்வதேசத்தை நோக்கியே எமது கோரிக்கைகளை வைத்துப் போராடி வருகின்றோம்.
17.11.2017 அன்றும் அதன் பின்னர் இருதடவையும் கொழும்பிலுள்ள பன்னாட்டு ராஜதந்திரிகளுடன் சந்திப்பை ஏற்படுத்தி எமது நிலைப்பாட்டையும் எமது கோரிக்கைகளையும் தெரிவித்திருக்கின்றோம். ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து பாராளுமன்றங்களில் எமது பிரதிநிதிகள் சென்று நீதி கேட்டிருக்கின்றார்கள்.
ஜெனீவா கூட்டத் தொடருக்கு 6 தடவைகள் எமது பிரதிநிதிகளை அனுப்பியது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களால் மட்டும் 20 தடவைகளுக்கு மேற்பட்ட பிரதான நிகழ்வுகளில் 193 நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சர்வதேச விசாரணை மூலம் மட்டு;மே நீதி தேவை என அழுத்திக் கூறியிருக்கின்றோம்.
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(30.08.2020) அன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம். வுழமை போல இம்முறையும் வடக்கில் யாழ்ப்பாணத்தில் மத்திய பஸ் தரிப்பிடத்தின் முன்பாக ஆரம்பித்து கச்சேரி வரை பேரணியாகச் சென்று அங்கு ஐ.நா வுக்கான மகஜர் கையளிப்புடன் நிறைவு பெறும். அதேபோல் கிழக்கில் மட்டக்களப்பில் கல்லடி பாலம் அருகே ஆரம்பிக்கும் பேரணியானது காந்தி பூங்கா வரை சென்று அங்கு மகஜர் கையளித்தலுடன் நிறைவு பெறும்.
எமது இந்த தன்னெழுச்சியான போராட்டத்தையும், அதன் வளர்ச்சியையும் கண்டு அதை மழுங்கச் செய்ய நினைக்கும் அரச புலனாய்வினரும் அவர்களின் முகவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவரை விலைக்கு வாங்கி அவரை கொண்டு எமது போராட்டத்தை குழப்ப முனைகின்றனர். அவர் காலத்திற்குக் காலம் வௌவேறு தரப்பினருடன் சேர்ந்து பிழைத்துக் கொள்பவர்.
அண்மையில் கூட இவர் ஒட்டுக்குழு அமைச்சருடன் இராப்போசன விருந்தில் கலந்து கொண்ட படம் ஊடகத்தில் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது.
தற்போது இவர் எங்கள் இலச்சனைக்கு ஒத்ததாகவும், எமது அமைப்பின் பெயரை ஒத்ததாகவும் உள்ள கடிதத் தலைப்பை உருவாக்கி, நாங்கள் போராட்டம் செய்யும் அதே நாள் அதே நேரம் யாழ்ப்பாணத்தில் ஒரு போராட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
இது எமது தூய்மையான போராட்டத்தை குழப்ப நினைக்கும் நயவஞ்சகத்தனமாகும். அது மட்டுமல்ல இவர் பாவித்த கடிதத்தலைப்பில் வடக்கு, கிழக்கு – சிறிலங்கா எனப் போட்டிருப்பதிலிருந்தே இவர் யாரின் கைக்கூலி என்பதை உங்களால் யூகிக்க முடியும்.
எனவே மேற்படி நபரை அடையாளங்கண்டு அவரின் சூழ்ச்சிக்குள் அகப்படாது அவதானமாக இருக்கும்படி பொதுமக்களாகிய உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
மறந்து விடாதீர்கள் உறவுகளே, எமதுபோராட்டம் யாழ்ப்பாணத்தில் பஸ் நிலையம் முன்பிருந்து ஆஸ்பத்திரி வீதி ஊடாக கச்சேரி வரையும் செல்லும். மட்டக்களப்பில் கல்லடி பாலத்திலிருந்து காந்தி பூங்கா வரை செல்லும். இந்த இரண்டு இடத்தில் மட்டுமே எமது போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.