கோத்தாவும் பிசி: காணிபிடிப்பும் மும்முரம்?
வடகிழக்கில் தமிழ் மக்களது நிலங்களை சுவீகரிப்பதற்கான நகர்வுகளை கோத்தா அரசு மும்முரமாக மேற்கொண்டுவருகின்றது.
தனது உத்தியோகபூர்வ சந்திப்புக்களில் கோத்தா இதற்கான நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றார்.
நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் வனஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகைகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வனவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
12 இலட்சம் ஹெக்டெயார் வன நிலங்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கைவசம் உள்ளன. காட்டு யானைகளின் உணவு தொடர்பாக கண்டறிவதும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பென்பதை கோத்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் ஊடுருவுவதைத் தடுத்து, மனித வாழ்வினையும் பயிர் நிலங்களையும் பாதுகாப்பதற்காக நிலையான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பாக்க் கண்டறிவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வன ஒதுக்கீடுகளில் உள்ள குளங்கள், நீர் நிலைகளை புனர்நிர்மாணம் செய்வதுடன், அப்பிரதேசங்களில் புல்லினங்களை வளர்த்தலை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டினாராம்.
கண்டல் தாவர பாதுகாப்பு மற்றும் அதனை விரிவுபடுத்தலின் முக்கியத்துவத்தை பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. கண்டல் தாவரங்களை பயிரிடும்போது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் சட்டங்களை இலகுபடுத்த வேண்டியுள்ளதனையும் தான் குறிப்பிட்டதாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் தமிழ் மக்களது காணிகளை சுவீகரப்பதில் வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் மும்முரமாக ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.