யாழ்ப்பாணம் மண்டைதீவில் தனியார் காணிகளை சுவீகரிக்க அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்!
யாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்க நிலஅளவைத் திணைக்களத்தினால் இன்று காணிகளை அளவிடுவதற்கு வருகை தந்த போது அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதனை அடுத்து இன்றைய நில அளவையை நிறுத்திவிட்டு அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மண்டதீவு தெற்கு கடற்கரை வீதியில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை கடற்படையின் முகாமின் விஸ்தரிப்புப்காக நில அளவை திணைக்களத்தினர் இன்று வந்திருந்தனர்.
வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்டதீவு கிராம சேவகர் பிரிவான ஜே/08 பகுதியில் அமைந்துள்ள தெற்கு கடற்கரை சுடலை வீதியில் உள்ள நான்கு பேருக்கு சொந்தமான 62 பரப்பு தனியார் காணியை கடற்படையினர் தமது முகாமை விஸ்தரிப்பிற்காக சுவிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதற்காக இன்று நிலஅளவைத் திணைக்களத்தினர் ஊடாக காணி அளவீடு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இதற்கு அப்பகுதி மக்களும் அரசியல் பிரமுகர்களும் ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.அத்துடன் தங்களின் ஆட்சேபனையை தெரிவித்து எழுத்து மூலமான கடிதத்தினையும் வழங்கியிருந்தனர்.
இதனை அடுத்து நில அளவை திணைக்களத்தினர் நிலங்களை அளப்பதை கைவிட்டு விட்டு சென்றனர்.குறித்த மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலைமை காணப்பட்டது.
அப்பகுதியில் ஏராளமான போலீசாரும் புலனாய்வுப் பிரிவினரும்,கடற்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.மேலும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை புலனாய்வாளர்கள் தமது கையடக்க தொலைபேசிகள் ஊடாக காணொளி மற்றும் புகைப்படங்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.