November 26, 2024

சிங்கள நண்பனுக்கு பௌத்த பாடம் புகட்டிய தமிழன் (உரையாடல் வடிவம்)

உரையாடல் வடிவம் 

„மணிமேகலையைத் தெரியுமா?“ என்று ஒரு சிங்கள நண்பனிடம் கேட்டேன்.

“ இல்லை யாரது?“ என்றான்

„நீயெல்லாம் எதுக்குடா பௌத்தனா இருக்கிறாய்?“ என்றேன்.

„நான் எதுக்குடா மணிமேகலையை என்ற நபரை தெரிஞ்சுக்கணும்?“ என்றான்.

„சரி சங்கமித்தையை தெரியுமா?“ என்று கேட்டேன்.

„ஆமா புனித போதியை (வெள்ளரசு மரம்) இலங்கைக்கு கொண்டுவந்த பௌத்த பெண் துறவி“ என்றான்.

„சரி, இப்ப சொல்லு மணிமேகலையை தெரியுமா தெரியாதா?“

„ஆ… தெரியும் தெரியும்… சங்கமித்தையின் மறுபெயர்தானே மணிமேகலை?“

„போடா டேய்“ கடுப்பாகிட்டேன்.

(சிறிது நேரத்தின் பின்னர்)

„உனக்கு கண்ணகியை தெரியுமா?“

„ஓ… பத்தினி தெய்வம்தானே? விகாரைகளில இருக்கு. நாங்க வணங்குவோம். எங்க குல தெய்வம் என்பார்கள்.“

„ஓ பத்தினியையும் உங்க தெய்வமாக்கிட்டிங்களோ? சரி இருக்கட்டும் கண்ணகிக்கு ஒரு கணவன் இருந்தான் தெரியுமா?“

„அதெல்லாம் தெரியா மச்சான், தலதா மாளிகால பத்தினிக்கு தனி கோவில் இருக்கு. நம்ம ஆக்கள் மாளிகாவுக்கு சென்றால் அங்கயும் கண்டிப்பா போவாங்க“ என்றான் சலிப்புடன்.

„சரி சொல்லுறன் வடிவா கேள். நீங்க பத்தினி என்று வணங்கும் தெய்வம் ஒரு தமிழ் பெண். பெயர் கண்ணகி. பார்தால் பசு, பாய்ந்தால் புலி. அவளது தகப்பன் ஒரு பேமஸ் Businessman. தன் நண்பனும் ஒரு பேமஸ் Businessman என்பதால் அவனது மகன் கோவலன் என்ற வளர்ந்துவரும் Businessmanக்கு கண்ணகியை நல்ல சீதனபாதனத்தோட கட்டிக் கொடுத்தான்.

அந்த நேரம் சிற்றரசுகள் தவிர மூன்று பெரிய நாடுகள் தமிழருக்கு இருந்தது. சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் கண்ணகியும் கோவலனும். கோவலன் கொஞ்சம் குழப்படி. மாதவி என்ற ஆட்டக்காரியுடன் காதலுற்று மணிமேகலை என்ற பெண்ணுக்கு தகப்பனாகிறான். தன் மனைவியையும் Business எல்லாத்தையும் மறந்து மாதவியே கதியென கிடந்து வறுமைப்படுகிறான். இதனால் மீண்டும் பழைய குருடி கதவை திறவடி என்று கண்ணகியிடம் வந்து பிழைப்புக்காக பாண்டி நாட்டுக்கு புலம்பெயர்கிறான். அங்குதான் அவனை விசாரணையில்லாமல் கள்ளப்பட்டம் சூட்டி கொன்றனர். இதனால் கண்ணகி பாண்டி நாட்டின் தலைநகர் மதுரையை எரிக்கிறாள். கோவலன் இல்லாத காலத்திலும் குழப்படி இல்லாமல் இருந்ததனால் கற்புக்கரசியாகி, அதாவது பத்தினி ஆகி அதன் வலிமையினாலேயே மதுரையை எரிக்கிறாள். அதனால் பத்தினித் தெய்வமாகிறாள்….

„அட அப்ப பத்தினித் தெய்வம் தமிழா?“ என்று கேட்டான்.

„ஓமடா பக்கி, நீங்கள் இப்படித்தான் இராவணனையும் சிங்களவனாக்கி வைத்திருக்கிறீங்கள்.“

„சரி மணிமேகலை பற்றி ஏன் கேட்டாய்?“ என்றான்.

„சொல்லுறன் இனி கவனமாக கேள். தன் காதல் கணவன் கோவலன் இறந்த செய்தியை அறிந்த மாதவி ஆட்டங்களை நிறுத்திவிட்டு பௌத்த துறவியாகிறாள். அத்துடன் கோவலனுக்கு பிறந்த தன் மகள் மணிமேகலையையும் துறவியாக்குகிறாள். அப்போது தமிழ் பௌத்தர்கள் சோழநாட்டில் அதிகமாக இருந்தார்கள். மணிமேகலை புத்தருக்கு மாலை கட்டும்போது தகப்பனை நினைத்து அழுகிறாள். அழுத கண்ணீர் மாலையில் பட்டுவிட்டது. மாலை புனிதமிழந்துவிட்டதென்று புதிய பூக்கள் பறிப்பதற்காக தோழியுடன் செல்கிறாள். அங்குதான் சோழ மன்னனின் மகன் உதயகுமாரன் என்பவன் மணிமேகலையை தேடி வருகிறான்.

துறவியாக இருந்த மணிமேகலை காதல் மயக்கத்தில் சற்று தடுமாறுகிறாள். இருந்தாலும் தன்னை உணர்ந்தவள் அதற்கு தீர்வு தேடுகிறாள். அதன் விளைவாக மணிமேகலா என்ற பௌத்த தெய்வத்தால் மணிபல்லவ தீவுக்கு (யாழ்ப்பாணம் நயினாதீவு) மயக்க நிலையில் கொண்டுசென்று விடப்படுகிறாள். அங்கு வந்தவளுக்கு புத்தபெருமான் தன் மறு வடிவமான பீடம் ஒன்றை கொடுக்கிறாராம். ஏற்கனவே அங்கு நாக வழிபாட்டில் இருந்த நாகர்கள் (இன்றைய ஈழத் தமிழரின் மூதாதையர்) மத்தியில் பௌத்த அறக் கருத்துக்களை விதைக்கிறாள்.

அவள் விட்டுச்சென்ற எச்சம்தான் இன்றைய நயினாதீவின் நாகவிகாரை. அது தமிழரின் பௌத்த கோவில். உங்கள் தேரர் ஒருவர் மகாவம்சத்தில் உருட்டி புரட்டி பொய் வரலாறை எழுதியுள்ளார். மணிமேகலை என்ற தமிழ்ப் பெண் துறவி உங்கள் வட இந்திய சங்கமித்தைக்கு முந்தியவள். புனிதமான புத்த பெருமான் பிறந்த அதே நாளில் அவளும் பிறந்ததனால் சிந்தாதேவி என்ற இன்னுமொரு பௌத்த தெய்வத்தின் அருளால் கிடைக்கப்பெற்ற அமுதசுரபி எனும் அட்சய பாத்திரத்தை வைத்து பலர் பசியை போக்கியவள்.

உனக்கு ஒன்று தெரியுமா? இன்று பௌத்த விகாரைகளில் கண்ணகி, விஷ்ணு, முருகன்,  பிள்ளையார் என்று இந்துக் கடவுள்களை கும்பிடுகிறீர்கள், தமிழ் பௌத்தர்கள் வணங்கிய தெய்வங்களான மணிமேகலா, சிந்தாதேவி எல்லாம் எங்கே? அவர்களையாவது தெரியுமா?

வட இந்திய சக்கரவர்த்தி அசோகனுடன் கூட்டிணைந்து இலங்கைக்கு தேவநம்பியதிஸ்ஸன் பௌத்தத்தை கொண்டுவந்ததாக சொல்கிறீர்கள். ஆனால் மணிமேகலை அதற்கும் முந்தியவள். ஈழத் தமிழர்கள் இயற்கையை வழிபட்டவர்கள். விஷமென்று தெரிந்தும் கொல்லும் நாகத்தை தெய்வமாக பூசித்தவர்கள். தனியே சிவனை வழிபட்டவர்கள். அதனால் பௌத்தம் எம்மத்தியில் செல்வாக்கிழந்து உங்கள் மத்தியில் வட இந்திய தொடர்புடன் செல்வாக்குப் பெற்றுவிட்டது.

கணிசமானளவு தமிழ் பௌத்தர்கள் சிங்களவர்களாக இனம்மாறிவிட்டனர். சிலவேளை நீயும் அதற்குள் அடங்கலாம். உங்கள் மூதாதையர்கள் வணங்கிய எங்கள்-அவர்கள் தெய்வங்களை இன்றும் பௌத்த விகாரைகளில் வைத்து வழிபடுகிறீர்கள்.

ஆனால் எல்லாவற்றையும்தாண்டிவந்து இது ஒரு சிங்கள-பௌத்த நாடு என்கிறீர்கள். காலம் செய்த கோலமடா“

„சொரி மச்சான்“ ஏதோ நினைப்புடன் சொன்னான்.

„சரி இப்ப சொல்லு மணிமேகலை யார்?“

„தமிழ் பௌத்த துறவி“ என்றான்.

„மறக்காமல் இதையும் கேள், நீங்கள் சொல்வீர்களே ‚புத்தம் சரணம் கச்சாமி‘ என்று ஒரு மந்திரம். அதுகூட தமிழ் பௌத்தர்களிடமிருந்து வந்ததுதான். மணிமேகலை இங்கு வந்து பரப்பினாள். மணிமேகலை என்ற எங்கள் காவியத்தில் இருக்கிறது. இதையெல்லாம் உங்கள் ஆக்களுக்கு சொல்லி விளங்கப்படுத்து“