November 24, 2024

தொடங்கியது மாகாணசபை தேர்தல் கலகலப்பு?

மாகாணசபை தேர்தலிற்கு முன்னதாக இலங்கை தமிழர் சுதந்திர முன்னணி எனும் புதிய கட்சி ஒன்றை அமைக்க அங்கஜன் தரப்பு தீவிர முயற்சி எடுத்து வருகின்றது.

ஏற்கனவே அவருடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட விண்ணன் எனும் வர்த்தகர் கட்சியொன்றை பதிவு செய்ய முற்பட்டுள்ளதுடன் முன்னணியை சேர்ந்த வி.மணிவண்ணனிற்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சஜித் கட்சியில் கூட்டு சேர்ந்து போட்டியிட்ட கணேஸ் வேலாயுதமும் தனது கட்சியை பதிவு செய்கிறார்.

இன்னொரு புறம் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள சி.வி.விக்கினேஸ்வரன்  தனது கட்சியை பதிவு செய்ய முற்பட்டுள்ளார்.

இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் ஒரே ஒரு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அங்கஜன் இராமநாதனின் தந்தை சதாசிவம் ராமநாதன் மூலம் சுதந்திர கட்சியின் பெயரை வைத்து வடிவத்தில் இலங்கை தமிழர் சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை பதிவு செய்து பெற்றுக் கொள்ள தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பில் சுதந்திர முன்னணி கட்சியை நீண்ட காலம் இலங்கையில் இயங்கியமை பற்றிய அறிக்கைகள், படங்களை தேர்தல் ஆணையத்துக்கு அவர்கள் வழங்கி இருக்கின்றனர் என அறியவருகிறது.

தொடர்ந்து இயங்கி வருவதாக தேர்தல்கள் ஆணையாளருக்கு எழுத்து மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பதிவில் கட்சியின் செயலாளராக ராமநாதனின் தந்தையார் சதாசிவம் ராமநாதனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் 2018 ல் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி உறுப்பினராக போட்டியிட்டு கரவெட்டி பிரதேச சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சதாசிவம் ராமநாதன் இப்போதுவரை சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இதேவேளை சதாசிவம் ராமநாதனை செயலாளராக கொண்டு தேர்தல் ஆணையத்திடம் பதிவுக்கு விண்ணப்பித்துள்ள கட்சியின் உத்தியோகபூர்வ முகவரி இல – 185 கோவில் வீதி யாழ்ப்பாணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோலவே அங்கஜன் இராமநாதன் சிறீPலங்கா சுதந்திர கட்சி சார்பில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவிலும் குறித்த முகவரி பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.