இந்திய பிரச்சினைக்கு தீர்வு காணும் டக்ளஸ்?
இந்திய இழுவைப்படகு அச்சுறுத்தல் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டப்படும் என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – இரணை தீவு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இந்திய இழுவைப்படகுகளின் பிரவேசம் அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆட்சி காலத்தில் அதனை தடுக்க எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சரிடம்; கேள்வி எழுப்பபட்டிருந்தது.
அப்போதே இந்திய இழுவைப்படகு பிரச்சினை இரணைதீவு பகுதியில் மாத்திரமல்லாது, அது இலங்கையின் வட மாகாணத்திற்கே பாரிய அச்சுறுத்தலாகியுள்ளதாக அமைச்சர டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தாம் இந்திய மத்திய அரசாங்கத்துடன் தொடரச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணத்திற்கு அச்சுறுத்தலாகியுள்ள இந்திய இழுவைப் படகினை இலங்கை எல்லை பகுதிக்குள் அனுமதிக்காதவாறு தடுப்பதற்கு உறுதிப்பாட்டினை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்திய இழுவைப் படகு பிரச்சினை மற்றும் வட மாகாண மக்களின் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னரும் இதனை தெரிவித்திருந்த டக்ளஸ் தமிழகத்திற்கு நேரில் சென்று இந்திய மீனவர்களை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.