மணிவண்ணன் விவகாரம்: பரிசீலிக்க குருபரன் கோரிக்கை?
மணிவண்ணன் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எடுத்திருக்கும் முடிவின் உள்ளடக்க சரி பிழைகளுக்கப்பால் அது எடுக்கப்பட்ட விதம் தொடர்பில் எனக்கு அடிப்படையான கருத்து வேறுபாடு உண்டென அக்கட்சி ஆதரவாளர் சட்டத்தரணி கு.குருபரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய கட்சி ஒன்று எப்படி உள்ளக ரீதியாக செயற்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் என்ற கடமையில் இருந்து முன்னணி விலகியிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். பல்வேறு நெருக்கடிகளை சவால்களை சந்தித்த முன்னணிக்கு இந்தக் கடமை உண்டு. இந்த எதிர்பார்ப்பை நாம் முன்னணியிடம் வைத்திருப்பதை சுமையாக கட்சியின் தலைமை பார்க்கக் கூடாது. தவறை திருத்தலாம், திருத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். இது தொடர்பில் இரு தரப்பாருடன் பேசி வருவதால் இதற்கு மேல் இது தொடர்பில் நான் வேறு எதையும் சொல்வதை தவிர்க்கிறேன்.
இங்கே நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கும் அனைவரதும் குறிக்கோள் தமிழ் தேசிய மாற்றரசியல் வெளியை பலப்படுத்துவதாகவே இருக்க வேண்டும். இந்த விவகாரத்தை பாவித்து உருட்டி விளையாட விரும்புவோருக்கு முன்னணியிலும் அக்கறை இல்லை.தமிழ் தேசிய மாற்று அரசியல் வெளியை தக்க வைக்க வேண்டும் என்றும் அக்கறை இல்லை. தமிழ் தேசிய அரசியலிலும் அக்கறை இல்லை. அதை உணர்ந்து மணிவண்ணன் தனது நகர்வுகளை எடுப்பார் என நான் நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மணிவண்ணன் விவகாரத்தில் முன்னணி தலைவருடன் பேச்சு நடத்திய குருபரன் இயலாமையினை அண்மையில் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.