தமிழரசில் களை எடுப்பு?
இலங்கை தமிழரசுக்கட்சியினை தனது கைகளுள் கொண்டு செல்ல முற்பட்ட சுமந்திரன் – சிறீதரன் தரப்பிற்கு ஆப்படிப்பது போன்று தமிழரசு கட்சியினை மாவை புனரமைப்பு செய்யவுள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் எதிர்வரும் 2020.08.29ம் திகதி வவுனியா குருமன்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது.
இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய குழு பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இக்கூட்டத்தில் முக்கிய விடயங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நியமிப்பு தொடர்பில் ஆராய்தல், பாராளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு மற்றும் எதிர்காலத்தில் கட்சியை வளர்ச்சிப் பாதையில் முன்நோக்கிச் செல்வதற்கான வழிவகைகளை ஆராய்தல், தேர்தல் காலத்திலும் அதற்கு முன்னரும், பின்னருமான காலங்களில் இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும், உறுப்பினர்களுக்கும் எதிரான பிரசாரங்களும் செயற்பாடுகளும் பற்றி ஆராய்தல், பாராளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு எற்பட்ட பின்னடைவு தொடர்பில் ஆராய்வதற்கான சுயாதீன குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் ஆராய்தல், தேர்தல் காலத்தில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்தல் போன்றன தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.