November 24, 2024

இனவாத ரீதியான சகதிக்குள் தள்ளப்படும்?

இன்றைய அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையோடு, தங்களுக்கு ஒரு பெரும்பான்மை பலம் இருப்பதாக கருதிக் கொண்டு ஒரு மிகக்கூடிய மமதையோடு  செயற்பட முனைவார்களானால் மீண்டும் இந்த நாடு ஒரு இனவாத ரீதியான சகதிக்குள் தள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியிருந்தது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், நாட்டின் ஒரு முக்கியமான பிரச்சினை தொடர்பில் நாட்டின் தலைவர் பேசாமல் விட்டமையானது நாட்டின் ஒரு துரதிஷ்ட நிலையாக எம்மால் பார்க்கப்படுகிறது.

இந்த நாட்டில் வாழ்கின்ற இரு தேசிய இனங்கள் சிங்கள தேசிய இனமும், தமிழ் தேசிய இனமும். தமிழ் தேசிய இனம் கடந்த 70, 80 ஆண்டுகளாக இந்த மண்ணிலே பல இனப்படுகொலைகளுக்கும், அழிவுகளுக்கும் உள்ளாக்கப்பட்ட ஒரு இனம்.அதனால் தான் அவர்கள் ஒரு நீண்ட கால போராட்டத்திற்குள் தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார்கள்.

அவ்வாறு அர்ப்பணிக்கப்பட்ட அவர்களது வாழ்க்கையிலே இன்று போராட்ட வடிவங்கள் மௌனிக்கப்பட்டிருந்தாலும் இந்த நாட்டினுடைய பிரஜைகள் தாங்கள், தாங்கள் இந்த நாட்டிற்கு உரியவர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் இன்னமும் உருவாகாமல் இருப்பது இந்த நாட்டிலே கொண்டு வரப்படுகின்ற பல்வேறுபட்ட சட்டங்களும், சிங்கள மக்களுடைய மனோ நிலைகளும், அவர்களை வழிநடத்துகின்ற சிங்கள தலைவர்களின் எண்ணங்களுமே இன்னும் இந்த நாட்டை வேறுபட்ட நிலைக்குள் வைத்திருக்கிறது.

குறிப்பாக இன்றைய அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையோடு, தங்களுக்கு ஒரு பெரும்பான்மை பலம் இருப்பதாக கருதிக் கொண்டு ஒரு மிகக்கூடிய மமதையோடு இதனை நடத்த முனைவார்களானால் மீண்டும் இந்த நாடு ஒரு இனவாத ரீதியான சகதிக்குள் தள்ளப்படும் என்பதற்கு வரலாறு அவர்களுக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கவேண்டும் என்பதல்ல.

ஏனென்றால் நீண்ட நெடும் வரலாற்று பாடங்களை அவர்கள் கற்றுக் கொண்டவர்கள். இந்த ஒரே தீவினுள் இரண்டு தேசிய இன மக்கள் வசிக்கின்ற போதும் அவர்கள் தமக்குரிய அரசியலையும் பொருளாதாரத்தையும் வெவ்வேறு அடிப்படையில் கொண்டுள்ளனர்.

இந்த உண்மைகளை அனுசரித்து ஏற்கனவே நடந்திருந்தால் இலங்கை பொருளாதாரத்தின் அபிவிருத்தியை எட்டுவதில் எவ்வித பிரச்சினைகளையும் கொண்டிருக்க மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.