என்னை அச்சப்படுத்திய ஜனாதிபதியின் அக்கிராசன உரை – மங்கள குற்றச்சாட்டு
ஜனாதிபதியின் அக்கிராசன உரை, இலங்கை மிகப்பெரும் பின்நோக்கிய பாய்ச்சலொன்றுக்குத் தயாராக இருக்கவேண்டும் என்ற தனது அச்சத்தை மீளவும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கிறார்.
நாட்டின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று நடைபெற்ற நிலையில், அங்கு கொள்கைப்பிரகடன உரையை நிகழ்த்திய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ‘மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு நாம் எப்போதும் மதிப்பளிக்கின்றோம்.
அதனூடாகவே மக்களின் இறைமையைப் பாதுகாக்க முடியும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதிய பாராளுமன்றம் நாட்டின் ஜனநாயகத்திற்கு இறுதிச்சடங்குகளை நடத்திய பாராளுமன்றமாக வரலாற்றில் பதியப்படுமா? என்று ஏற்கனவே கேள்வியெழுப்பியிருந்த மங்கள சமரவீர, ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரை தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
அண்மைய காலங்களில் மிகச்சிறந்த ஒரு தேசிய விளையாட்டுக் கவுன்ஸிலை நியமித்தமைக்காக நாமல் ராஜபக்ஷவிற்கு வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கின்றேன்.
எனினும் பெரும்பான்மைப் பார்வையை மையப்படுத்திய உங்களுடைய சித்தப்பாவின் (ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின்) அக்கிராசன உரை, இலங்கை பின்நோக்கிய ஒரு பாரிய பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கவேண்டும்’ என்ற என்னுடைய அச்சத்தை மேலும் உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது என்று குறிப்பிட்டிருக்கிறார்.