அத்தனை தோல்விக்கும் ரணிலே காரணம்!
ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டாலும் செய்யப்படாவிட்டாலும் நாட்டுக்கோ அல்லது கட்சிக்கோ எவ்வித நன்மையும் இடம்பெறப்போவதில்லை. கடந்த 25 வருடங்களாக ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த செயற்பாடுகளே இதற்கு காரணமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில் ,
ரணில் விக்ரமசிங்க எல்லா சந்தர்ப்பங்களிலும் கட்சியை செயற்திறனற்றதாக்கும் வகையிலேயே செயற்பட்டுள்ளார். கடந்த 25 வருடங்களும் அவர் இதனையே செய்தார். எனவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றினாலும் மாற்றவில்லை என்றாலும் நாட்டுக்கோ அல்லது மக்களுக்கோ எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களே எம்மை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளனர். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் பெயர் இல்லாமல் மாற்றத்துடனேயே நாம் நாடாளுமன்றம் செல்கின்றோம். கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவினுடைய செயற்பாடுகளே இதற்கு காரணமாகும். பொதுத் தேர்தல் முடிவுகள் அவரது செயற்பாடுகளின் பலனாகும் என்றார்.