November 23, 2024

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை அல்லது பேச்சாளர் பொறுப்பு; இல்லாவிட்டால் தனித்து இயங்குவோம்: ரெலோ அதிரடி முடிவு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பதவியை அல்லது கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை தமிழீழ விடுதலை இயக்கத்திடம் (ரெலோ) ஒப்படைக்க வேண்டுமென அதிரடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, கட்சியின் தலைமைக்குழு.

ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் நேற்று முன்தினம் (16) திருகோணமலை சுங்க வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த போது இந்த அதிரடி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழ் அரசு கட்சியின் பெயரில் இரா.சம்பந்தன்- எம்.ஏ.சுமந்திரன் தரப்பு மட்டுமே கையாண்டு வரும் நிலையில், தனிநபர் ஏகபோகத்தை உடைத்து, கூட்டமைப்பை நேர்வழிப்படுத்த இந்த அதிரடி முடிவை ரெலோ எடுத்துள்ளது. கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.

தலைமைக்குழு உறுப்பினர்கள் 15 பேர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கடந்த தேர்தலில் ரெலோவின் வேட்பாளர்களிற்கு ஒத்துழைக்காத ரெலோ பிரமுகர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. அம்பாறையில் ஹென்ரி மகேந்திரன் கடந்த தேர்தலில் ஒத்துழைக்கவில்லையென திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் கமல்ராஜ் காரசாரமாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

யாழ் மாவட்டத்தில் விந்தன் கனகரட்ணம் தேர்தலில் தமக்கு ஒத்துழைக்கவில்லையென சபா.குகதாஸ், குருசாமி சுரேந்திரன் ஆகியோர் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 20 பேர் வரையில் கட்சிக்கு வேலை செய்யவில்லையென்பதை இந்திரகுமார் பிரசன்னா சுட்டிக்காட்டினார்.

வெற்றிடமாக உள்ள கட்சியின் செயலாளர், தவிசாளர், உபதவிசாளர் பொறுப்புக்களிற்கான நியமனத்தை தேசிய மாநாட்டில் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

தமிழ் தேசய கூட்டமைப்பிற்கு கிடைக்கும் தேசியப்பட்டியல் ஆசனத்தை இலங்கை தமிழ் அரசு கட்சி மாத்திரமே கடந்த 10 ஆண்டுகளாக பாவித்து வருகிறது. தேசியப்பட்டியல் நியமனத்தில் கூட பங்காளிக்கட்சிகளுடன் அவர்கள் கலந்துரையாடுவதில்லை.

இம்முறை தேசியப்பட்டியல் ஆசன நியமனமும் பங்காளிகள் மட்டுமல்ல, தமிழரசு கட்சியின் தலைவருக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக வழங்கப்பட்டிருந்தது. கூட்டமைப்பிற்குள் நிலவும் இந்த வெளிப்படையற்ற தன்மையை முடிவுக்கு கொண்டுவர, தேசியப்பட்டியல் ஆசன நியமனத்தில் இரண்டரை வருடங்களை ரெலோவிற்கும் வழங்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இரா.சம்பந்தனிற்கு செல்வம் அடைக்கலநாதன் ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தை தலைமைக்குழு கூட்டத்தில் வாசித்து காண்பித்தார். ரெலோவிற்கு வழங்கப்படும் இரண்டரை வருட வருட நியமனத்தை ரெலோவே, யாருக்கு, எந்த பகுதிக்கு வழங்குவதென்பதை ரெலோவே தீர்மானிக்கும்.

அத்துடன், கூட்டமைப்பின் தலைமை மற்றும் பேச்சாளர் பொறுப்பும் தமிழ் அரசு கட்சியின் வசமேயுள்ளது. இரண்டில் ஏதாவதொரு பொறுப்பை ரெலோவிடம் விட்டுத்தர வேண்டும். கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி அல்லாமல் தலைமை பதவி வழங்கப்பட்டாலும், கூட்டமைப்பின் பேச்சாளராக எம்.ஏ.சுமந்திரன் தொடர்வதற்கு ரெலோ ஒத்துழைக்காது.

பேச்சாளர் பொறுப்பை ரெலோ அல்லாமல் புளொட் ஏற்றுக்கொண்டாலும், ரெலோ அதை ஏற்றுக்கொள்ளும். இரண்டு கட்சிகளும் எதிர்வரும் காலங்களில் கூடுதல் நட்புறவுடன் இணைந்தே செயற்படும் என தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை கூட்டி, இந்த விடயங்களை ஆராய வேண்டுமென ரெலோ வலியுறுத்தியுள்ளது. உடனடியாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவை கூட்டும்படி இரா.சம்பந்தனிற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டது.

கூட்டமைப்பின் தலைமை அல்லது பேச்சாளர் பொறுப்பு பங்காளிக்கட்சிகளிற்கு வழங்கப்படா விட்டால், பங்காளிக்கட்சிகள் இரண்டும் சுயாதீனமாக செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அத்துடன், வழக்கம் போல உள்வீட்டு தகவல்களை தமிழ்பக்கத்திற்கு வழங்கும் கறுப்பாடுகள் யார் என செல்வம் அடைக்கலநாதன் எகிறி விழுந்தார். அந்த கறுப்பாடு கண்டுபிடிக்கப்பட்டால் மறுபேச்சில்லாமல் கட்சியை விட்டு நீக்குவோம் என்றும் எச்சரித்தார்.