கனடாவில் பொய்யாக பழி சுமத்தப்பட்டு சிறை சென்ற இலங்கைத் தமிழர்..!!
இலங்கையில் யுத்தத்துக்குத் தப்பி தாய்லாந்துக்கு ஓடினர் ஒரு கணவனும் மனைவியும்… தாய்லாந்திலிருந்தபோது, கப்பலில் கனடாவுக்கு செல்கிறோம், வருகிறீர்களா என நண்பர் ஒருவர் கேட்க மகிழ்ச்சியாக புறப்பட்டனர் குணராபின்சன் கிறிஸ்துராஜா, விக்டோரியா தம்பதியர்.
கப்பல் பயணம் கொடுமையாக இருந்தது… பயங்கர மக்கள் நெருக்கடி, பாதுகாப்பு உபகரணங்களோ கழிவறைகளோ இல்லாமல் 380 ஆண்கள், 63 பெண்கள் மற்றும் 49 குழந்தைகள்… ஒருவர் வழியிலேயே இறந்துபோனார், மற்றவர்கள் கொஞ்சம் சோறு, நூடுல்ஸ் மற்றும் கருவாட்டுடன் உயிர் வாழ்ந்தார்கள்.
பெண்களில் நால்வர் கர்ப்பிணிகள், கிறிஸ்துராஜாவின் மனைவி உட்பட! எல்லோருக்கும் இருந்த ஒரே சந்தோஷம், தாங்கள் கனடாவுக்கு செல்கிறோம் என்பதுதான். ஆனால், கனடா வந்திறங்கியபோது அந்த சந்தோஷம் காணாமல் போனது.
கரையிறங்கிய அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு அனைவரும் காவலிலடைக்கப்பட்டனர், சிலர் பல மாதங்களுக்கு… அவர்களில் ஒருவர் கிறிஸ்துராஜா… கப்பல் ஒன்றில் மனிதக் கடத்தல்காரர்களும் தீவிரவாதிகளும் வந்திறங்கியிருக்கிறார்கள் என தகவல் பரவ, கனடாவே பரபரத்தது.
வாக்கெடுப்பு ஒன்றில் கிட்டத்தட்ட பாதி கனேடியர்கள், 48 சதவிகிதத்தினர், வந்தவர்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பவேண்டும் என்றார்கள்.
கிறீஸ்துராஜா மீது வேறொரு பெரிய குற்றம் சாட்டப்பட்டது. கப்பலின் உரிமையாளரே அவர்தான், பணத்தை வாங்கிக்கொண்டு அவர்தான் மக்களை கனடா அழைத்துவந்தார் என கூறப்பட்டது.
வழக்கு விசாரணைகளில் ஆறு ஆண்டுகள் ஓடிப்போய்விட்டன. தனது முதல் குழந்தை பிறக்கும்போது அவளுடன் இல்லை கிறிஸ்துராஜா, அவர் சிறையிலிருந்தார்.
தற்போது ஒரு பிளம்பராக பணிபுரியும் கிறிஸ்துராஜாவின் அகதி கோரிக்கை இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, ஆனால் அவரது மனைவி விக்டோரியாவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
MV Sun Sea என்னும் அந்த கப்பல் கனடா வந்து பத்து ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூறும் நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளார் கிறிஸ்துராஜா.
நாங்கள் இந்த நாட்டை அழிக்க வந்த தீவிரவாதிகள் அல்ல, ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக நாங்கள் இங்கு வந்தோம் என்னும் செய்தியை கனடாவுக்கு தெரிவிப்பதற்காகத்தான் அந்த நிகழ்ச்சியில் தானும் தனது குடும்பமும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கிறார் அவர்.