புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு சிறுபான்மையினத்தவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறங்கள் நீக்கப்பட்ட தேசியக்கொடிகள்!
புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு இன்றைய தினம் கண்டி மாநகரத்தில் பல பகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சிறுபான்மையினத்தவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகளை உடனடியாக அகற்றுவதற்கு கண்டி மாநகரசபை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வரலாற்று வெற்றியைப்பெற்று அரசாங்கம் அமைத்திருக்கும் நிலையில், அதன் புதிய அமைச்சரவை நேற்று புதன்கிழமை தலதா மாளிகையின் பார்வையாளர் அரங்கான மகுல் மடுவவில் வைத்துப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.
இந்நிகழ்வை முன்னிட்டு கண்டி மாநகரத்தின் பல பகுதிகளிலும் மாநகரசபை ஊழியர்கள் தேசியக்கொடியில் சிறுபான்மையினரைப் பிரதிபலிக்கும் நிறங்கள் நீக்கப்பட்ட, சிங்கம் மட்டும் காணப்படும் கொடிகளைக் காட்சிப்படுத்தியதாகவும் பின்னர் அவற்றை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கண்டி மாநகரசபையின் ஆணையாளர் சந்தன தென்னகோன் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் தேசியக்கொடியில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரதிபலிக்கும் நிறங்கள் நீக்கப்பட்ட ‘தனி சிங்கக்கொடி’ கண்டி மாநகரத்தில் பறக்கவிடப்பட்டமையைத் தொடர்ந்து, அதன் காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதோடு அது கடும் கண்டனங்களுக்கும் உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.