November 23, 2024

கிட்லராகும் கோத்தா?

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அஞ்சலி செலுத்தி இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு தன்னுடைய நாடாளுமன்ற பயணத்தை தொடங்குவதாக நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் முன்னாள் வடக்குமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆவணி மாதம் 5 ம் திகதி நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் முன்னாள் வடக்குமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் இன்று முள்ளிவாய்க்காலிற்கு பயணம் செய்திருந்தார்.

நாடாளுமன்றம் செல்வதற்கு முன்னதாக பல்லாயிரக்கணக்கான மக்கள் 2009 இல் உயிர் நீத்த இடமாகிய முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருக்கின்றன நினைவு தூபியில் இன்று காலை 11 மணிக்கு அஞ்சலி நிகழ்வு ஒன்றில் அவர் பங்கெடுத்திருந்தார்.

அவருடன் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் கட்சி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் வருகைதந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அகவணக்கம் செலுத்தி சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் உயிர்நீத்த எங்களுடைய உறவுகளின் கல்லறையில் நின்று பிரார்த்திக்கின்றேன்.இலங்கை அரசு கிட்லரது நாஜி அரசாக மாறிவருகின்றது. விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்ததும் இங்குதான். இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு என்னுடைய நாடாளுமன்ற பயணத்தை இங்கிருந்து தொடங்குகிறேன் என சி.வி.விக்கினேஸ்வரன் அறிவித்துள்ளார்.