தும்புத்தடியுடன் களமிறங்கிய முன்னாள் உறுப்பினர்?
யாழ்.மாநகரசபையின் சுத்திகரிப்பு பணிகள் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வது தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளார் முன்னாள் உறுப்பினரான தங்கமுகுந்தன்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர் வழமையாக யாழ்ப்பாண நகரை ஒரு தடவை சுற்றிப்பார்த்துவிட்டு பொது நூலகம் செல்வது வழமை! கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வெள்ளிக்கிழமை அண்ணா கோப்பிக்கு முன்பாக ஒளவையார் சிலைக்கு முன்பாக யாரோ ஒரு கடைக்காரராகத்தான் ,ருக்கும் – கண்ணாடித்துண்டுகளை கொண்டுபோய் சிலைக்குக்கீழே வைத்திருப்பதை அவதானித்தேன். கண்ணாடிச் சிதறல்கள் முன்பு வீதியில் கிடக்கிறது.
அந்த நேரம் பிரதி முதல்வர் அன்னை புத்தகசாலைக்கு முன் நின்றிருந்தார் நான் அவரிடம் போய்க் கதைப்பதற்கு முன் அவர் வாகனத்தில் சென்றுவிட்டார். உடனேயே மாநகர சபைக்கு அழைப்பு எடுத்து முதல்வர் அலுவலகத்துக்கும் முறைப்பாடு செய்தேன். எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் தினத்தன்று இரவு நாங்கள் பெட்டிகளைப் பொறுப்பேற்று கதவடைக்கும்வரை நின்றுவிட்டு வரும்போது நூலகத்தின் முன் பிரதி முதல்வரிடம் நேரிலும் இதைத் தெரிவித்தேன். நேற்று மாலையில் மாநகர சபைக்குச் சென்று பொதுசன தொடர்பு அதிகாரியிடமும் முதல்வர் அலுவலகத்திலும் சுகாதாரப் பகுதியிலும் முறைப்பாடு செய்தேன்.
நேற்று புதன்கிழமை மதியம் 2 மணியளவில் நானும் எங்கள் கூட்டணியின் வலி தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் தயாபரனுடனும் சென்று துப்பரவு செய்தோம். யாரோ முகவரிடம் பொறுப்புக் கொடுத்துவிட்டு தூய்மையற்ற நிலையில் யாழ் மாநகரம் இருப்பதை வன்மையாகக் கண்டிப்பதுடன் துப்பரவு செய்ய வக்கில்லாவிட்டால் நாமே அதனையும் துப்பரவு செய்து காட்டுவோம் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.