November 26, 2024

அபே ஜன பலவேகய கட்சியின் பொதுச்செயலாளரைக் காணவில்லை!!

அபே ஜன பலவேகய  கட்சியின் பொதுச்செயலாளர் வேதனிய விமல  திஸ்ஸ  தேரர்  காணாமல் போயுள்ளார் என அக்கட்சியின்  உறுப்பினர் ஆனந்த சாகரதேரர்  தெரிவித்தார்.பொதுஜன பல சேனா அமைப்பின்  காரியாலயத்தில்  இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் காணாமல் போன விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இச்சம்பவம் காரணமகவே எங்கள் கட்சியின் தேசிய பட்டியல் விவகாரத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

பௌத்த மத உரிமை ,  சிங்கள மக்களின்  உரிமை ஆகியவை தொடர்பில்  பொதுபல சேனா   அமைப்பின் பொதுச்செயலாளர்  ஞானாசார தேரர்  குரல் கொடுத்தார்.  பாராளுமன்றத்திற்கு இவர் செல்ல வேண்டும் என்பது பெரும்பாலான  பௌத்த மக்களின்     எதிர்பார்ப்பாக அமைந்தது.   இதன் காரணமாகவே    இவர்   பொதுத்தேர்தலில்  போட்டியிட்டார்.

அபே ஜனபல வேகய கட்சி  தாக்கல் செய்த வேட்புமனுக்கல்  நான்கு மாகாணங்களில் இரத்து  செய்யப்பட்டன.  17  தேர்தல்   மாவட்டங்களில்  போட்டியிட்டு சுமார் 67ஆயிரம் வாக்குகளை  கைப்பற்றியுள்ளோம்.

எமது கட்சிக்கு  தேசிய பட்டியல் ஊடாக  ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த ஒரு ஆசனத்தை  ஞானசார தேரருக்கு வழங்க வேண்டும் என   கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்தது. தேர்தலில்  போட்டியிடுவதற்கு முன்னர் தேசிய பட்டியல் பகிர்வு தொடர்பில் கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் காணப்படவில்லை.

அபேஜனபல வேகய கட்சியின் பொதுச்செயலாளர் வேதனிய விமல தேரர் தேர்தலின் பெறுபேறுகள் வெளியான தினத்தில் இருந்து காணாமல் போயுள்ளார்.

தொலைப்பேசியின் ஊடாக அழைப்பு ஏற்படுத்திய போதும் இதுவரையில் உரிய  பதில் கிடைக்கப் பெறவில்லை.  அவர்  காணாமல் போயுள்ளாரா? அல்லது கடத்தப்பட்டுள்ளரா? என்ற  சந்தேகம்  எமக்கு காணப்படுகிறது.

ஒதுக்கட்டுள்ள  ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக பொதுபல சேனா அமைப்பின்  பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பாராளுமன்றம் செல்ல கூடாது  என்பதை நோக்கமாக கொண்டு சர்வதேச மற்றும் உள்ளக மட்டத்தில் சூழச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.   இவ்விடயம்  தொடர்பில் தேசிய  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரிவித்துள்ளோம்.

தேசிய பட்டியல் தொடர்பான வர்த்தமானியை   வெளியிடுவதை தாமதப்படுத்துவதாகவும், அதற்குள் ஒரு தீர்வை பெற்றுக் கொள்ளுமாறும்  குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போயுள்ள பொதுச்செயலாளரை  கண்டுப்பிடிப்பது  தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும். 14ம் திகதிக்கு முன்னர் இவர் கிடைக்காவிடின்  கட்சியின் யாப்பிற்கு அமைய நீதிமன்றத்தை நாடி செயற்குழுவின் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.