தமிழ்ப் பிரதேசங்களில் தடைப்பட்டுள்ள அபிவிருத்திகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் : பிரதமர் மஹிந்த உறுதி!
கடந்த காலங்களில் தமிழ்ப் பிரதேசங்களில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி தினசரி நாளிதழான தி ஹிந்துவின் (the hindu) சஞ்சிகையான, frontline சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலொன்றில் அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷ நேற்று பதவியேற்ற நிலையில், பதவியேற்புக்கு சற்று முன்னதாக குறித்த நேர்காணலை வழங்கியுள்ளதாக, frontline சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
தமது அரசாங்கத்தின் காலப்பகுதியில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் கடந்த சில வருடங்களாக தடைப்பட்டிருந்ததாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு புதிய ஆட்சியின் கீழ் முன்னுரிமையளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், தடைப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்து, அவற்றை விரைவுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அத்துடன், தமது கடந்த ஆட்சிக் காலப்பகுதியில் வடக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் இனம் அல்லது கலாச்சார பின்னணியைப் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பினரினதும் தேவைகளை தமது அரசாங்கம் பூர்த்தி செய்யும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், வட மாகாணத்தில், வாழ்வாதாரம், விவசாயத்துக்கான நீர்ப்பாசனம், ஏற்றுமதியை மேம்படுத்தல் மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உடனடிக் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மக்கள் தமது ஆட்சியின் மீது பாரிய நம்பிக்கை வைத்து வாக்களித்திருப்பதாகவும், அதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தம்மிடம் காணப்படுவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமக்கு முன்னால் காணப்படும் பாரிய சவாலாக இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை காணப்படுவதாகவும், அவர் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில், கொரோனா தாக்கம் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது குறித்து அவதானம் செலுத்தப்படும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் ஏற்கனவே பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் முன்னணி தினசரி நாளிதழான தி ஹிந்துவின் (the hindu) சஞ்சிகையான, frontline சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலொன்றில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.