துயர் பகிர்தல் Fr J B தேவராஜா
வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட Fr J B தேவராஜா அடிகள் இன்று காலை (10.08.2020) இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி கிடைத்துள்ளது.
சொந்தமண்ணில் பல காலங்கள் பலவிதமான பணிகளை ஆற்றியவர். இலங்கையில் எல்லா தமிழ் கிராமங்களிலும் அவரது பாதம் நடந்திருக்கிறது. எல்லா கிராமங்களிலும் உள்ள எல்லா மக்களையும், தன் இதையத்தில் ஆழமாய் பதிய வைத்திருந்தவர். யாராவது ஒரு சிறுவன் போய் பாதர் நான் இந்த இடம், இந்த கிராமம் என்று சொன்னால், அந்த சிறுவன் புதியவராக இருந்தாலும், அவருடைய தந்தை அப்படியே பூட்டன் என்றுபோய் முழு குடும்பத்தையும் சொல்லி, அந்த சிறுவனுக்கே தெரியாத சம்பவங்களையும் சொல்லி சந்தோசப்படும் அளவுக்கு அனைவரையும் நன்கு அறிந்தவர். தனிப்பட்ட முறையிலே பல குடும்பங்கள் இக்கட்டான காலங்களில் இருந்தபோது, காத்திரமான முடிவுகளை எடுத்து, அவற்றில் இருந்து மீண்டு வர காரணமாய் இருந்தவர்.
மன்னாரில் தண்ணீர் தட்டுப்பாடு வந்த காலங்களில் தண்ணீர் இயந்திரங்களை கொண்டுவந்து பொதுமக்களுக்கு கொடுத்து விவசாயங்கள் பெருகவும் தோட்டங்கள் செழிக்கவும் பஞ்சங்கள் தணியவும் முழு மூச்சாக செயல்பட்டவர். யுத்த வேளைகளில் மக்களோடு மக்களாக இருந்து உதவியவர். இதன் காரணமாக இராணுவ அச்சுறுத்தல்களால், ஆயரின் வற்புறுத்தலின் காரணமாக வெளிநாடு அனுப்பப்பட்டவர்.
புலம்பெயர் தேசத்தில், இடம் வலம் தெரியாத நேரத்தில், ஒரு விதமான வசதிகளும் இல்லாத காலத்தில், நாட்டுக்கு நாடு ஓடியோடி ஆன்மீகப்பணி மட்டுமன்றி, தாயகத்தில் உள்ள மக்களின் நிலைகளை இங்கு அறிவிப்பதும், அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை, நேரம் காலம் பாரமல் ஓடியோடி செய்த இனியவர். புலம்பெயர் தேசத்தில் திசை தெரியாது நின்ற பல தமிழர்களுக்கு திசையாய் நின்றவர்… இனியவர்…. இனி.. எவர்….
அமைதியில் இளைப்பாறுவாராக.