November 26, 2024

நாளை முதல் மத்தல சர்வதேச விமான நிலையத்தை செயற்படுத்த திட்டம்!

மத்தல சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பாரிய சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எமிரேட்ஸ் விமானம் நாளை மத்தல விமான நிலையத்திற்கு வருகை தந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்கு சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல ராஜபக்ஷ விமான நிலையம் 2013 மார்ச் 18ம் திகதி திறக்கப்பட்டது.

எனினும், செப்டம்பர் 2, 2015 அன்று நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் மத்தல விமான நிலைய வளாகத்தில் நெல் சேமிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், 2 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கட்டடத்தில் நெல் சேமிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த மத்தல சர்வதேச விமான நிலையம், கொரோனா தொற்று காரணமாக மீண்டும் செயற்பட தொடங்கியது.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மட்டும், மத்தல சர்வதேச விமான நிலையம் 70 விமானங்களை கையாண்டது, 2,500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சேவையை வழங்கியுள்ளது.

இந்த கால பகுதியில் ஏராளமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் வெளிநாட்டு விமானங்களும் மத்தல விமான நிலையத்திற்கு வந்து சென்றுள்ளன.

இந்நிலையிலேயே, மத்தல சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாளை அமெரிக்காவிற்கு பொருட்களை கொண்டு செல்லவுள்ளது.

இதன்படி, எமிரேட்ஸ் விமானம் மூலம் 28 டன் சரக்கு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.